சென்னை: ஃபெஞ்சல் புயல்  காரணமாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் பேரழிவை எதிர்கொண்டுள்ள நிலையில்,  தமிழகத்திற்கு  நிவாரண உதவியாக மத்திய அரசு முதற்கட்டமாக ரூ. 944.80 கோடி ஒதுக்கி உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 30ந்தேதி இரவு சென்னை அருகே கரையை கடந்த ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தின் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.  குறிப்பாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. இதற்கிடையில், சாத்தனூர் அணை திறப்பாலும் பல  கிராமங்கள் தண்ணீரில் மூழ்கின. தென்பெண்ணையாறு புதிய பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களும்,  பயிர்களும் பாதிக்கப்பட்டு உள்ளன.

ஃபெஞ்சல் புயல் பாதிப்பை தொடர்ந்து   பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து,  புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் தமிழகத்திற்கு முதற்கட்டமாக ரூ. 2 ஆயிரம் கோடி நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ. 944.80 கோடியை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்க வேண்டிய தொகையில் இந்த தொகை (ரூ. 944.80 கோடி) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.