சென்னை: சைபர் குற்ற புகார்கள் அதிகரித்து வருவதாகவும், சிலைகளை ஆவணப்படுத்த உயர்மட்டக் குழு அமைக்கப்படும் உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கும், ஜவாஹிருல்லா உள்பட சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடை பெற்றது. அதைத்தொடர்ந்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை கொள்கை விளக்க குறிப்பையும் தாக்கல் செய்தார்.
முன்னதாக கேள்வி நேரத்தில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, காவல்துறையினர் மன அழுத்தத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் , காவல்துறைகளில் காலியிடங்களை நிரப்பி காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் , காவல்துறையினருக்கு மின்னணு பொருட்கள் வாங்க வழங்கப்படும் படியை உயர்த்த வேண்டும், சட்டமன்ற பேரவையின் கேள்வி நேரம் முழுமையாக ஒளிபரப்பப்பட வேண்டும், காவல்நிலை மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டு வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்றத்தின் கேள்வி நேரம் முழுமையாக ஒளிபரப்பப்படுகிறது என்றார். பின்னர் விசாரணை கைதிகள் மரணம் தொடர்பான கேள்விக்குபதில் கூறியவர், “விசாரணை கைதிகள் விக்னேஷ், தங்கமணி மரண வழக்குகளில் எதையும் அரசு மறைக்கவில்லை” என்றார். சாத்தான்குளம் சம்பவத்தில் தந்தை மகன் உயிரிழந்தார்கள். அதில் குற்றவாளிகளை காப்பாற்றியது யார்? அப்படி இந்த அரசு இருக்காது. யார் தவறு செய்தாலும் கண்டிப்பாக தண்டனை வாங்கி தரப்படும். மீண்டும் சொல்கிறேன். சாத்தான்குளம் சம்பவம் போல் இந்த வழக்குகள் விசாரிக்கப்படாது. சரியாக விசாரிக்கப்படும்” என்றார்.
இதற்கு பதிலளித்த எதிக்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, ‘சாத்தான்குளம் சம்பவம் முறையாகவே விசாரிக் கப்பட்டது. யார் முதல்வராக இருந்தாலும் காவல் துறை அதிகாரிகள் கொடுக்கும் அறிக்கையை வாசித்து வருகிறோம். நான் முதல்வராக இருந்தபோதும் சரி, நீங்கள் முதல்வராக இருந்தாலும் சரி காவல்துறை அதிகாரிகள் கொடுக்கும் அறிக்கையைதான் படித்து கொண்டிருக்கிறோம்’ என்று தெரிவித்தார். அத்துடன், சிபிஐயிடம் இவ்வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுத்தினார்.
அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், `தமிழ்நாடு காவல்துறையே இவ்வழக்கை சிறப்பாக விசாரிக்கும் போது, எதற்கு சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்? அதிமுக ஆட்சிகாலத்தில் நடந்த லாக் எப் மரணங்களில் எந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்துள்ளீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் கூறிய எடப்பாடி பழனிச்சாமி தற்போதுள்ள காவல்துறை மீது நம்பிக்கை இல்லாததால் தான் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க செல்கிறோம் என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய முதல்வர், “சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு தொழில்நுட்ப உதவியோடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆதாய கொலை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 6 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகர காவல்துறையினருக்கு எனது பாராட்டுகள்” என்றார்.
இதைத்தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட காவல்துறை கொள்கைவிளக்கக் குறிப்பில், தமிழ்நாட்டில் சிலைகளை ஆவணப்படுத்தி பாதுகாக்க உயர்மட்டக் குழு அமைக்க பரிசீலனை செய்யப்பட்ட வருகிறது.
2021-ல் 442 பாலியல் வன்கொடுமை வழக்குகள் என பெண்களுக்கு எதிராக 4,469 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு 748-ஆக இருந்த இணையதள குற்ற புகார்களின் எண்ணிக்கை 2021-ம் ஆண்டு 13,707 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் 1,648 சதவீதம் அதிகமம்.
டிஜிட்டல் மயமாக்கல், இணைய வசதிகள் மற்றும் செல்போன்களின் பரவலான பயன்பாடு, இணையதள குற்றங்கள் வேகமாக அதிகரிக்கக் காரணமாக உள்ளது.
2011-ம் ஆண்டு இணையதள குற்ற புகார்களின் எண்ணிக்கை 748-ஆக இருந்த நிலையில் 2021-ம் ஆண்டு 13,707 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் 1,648 சதவீதம் அதிகமாகியுள்ளது.
பெரும்பாலான இணையதள குற்ற வழக்குகளில் வெளிநாட்டினர் ஈடுபடுவதால், குற்றவாளிகளை கைது செய்தல் மற்றும் களவு போன சொத்துக்களை மீட்டெடுத்தல் மிகப்பெரும் சவாலாக உள்ளது.
வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டாலும், சட்ட சிக்கல்கள் மற்றும் இதர நடைமுறைகள் காரணமாக, புகார்தாரருக்கு பணத்தைத் திரும்ப வழங்குவது காலதாமதத்தை ஏற்படுத்துகிறது.
இப்பிரச்சினையை எதிர்கொள்ள சென்னை மாநகரில் கூடுதலாக அதாவது 4 மண்டலங்களுக்கு தலா ஒன்றும், மத்திய குற்றப்பிரிவிற்கு ஒன்றும் என 5 இணையதள குற்ற காவல் நிலையங்கள் மறுபரவலாக்கும் முறை மூலம் ரூ.85.69 லட்சம் செலவில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசு இதற்கான ஆணை வெளியிட்டுள்ளது.
புலன் விசாரணையை அறிவியல் முறையில் மேம்படுத்த இணையதள தடயவியல் ஆய்வகம் அமைத்து அதில் உயர்தொழில்நுட்ப தடயவியல் கருவிகள், மென்பொருட்கள், சமூக வலைதள ஊள்ளீட்டுக் கருவிகள் அமைக்க ரூ.6.9 கோடி செலவில் “பாதுகாப்பான நகர” திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே இணையதள குற்றத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அவர்கள் இழந்த பணம் ரூ.6.75 கோடி காவல்துறையின் தீவிர நடவடிக்கையால் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.