சென்னை: சென்னையில் உள்ள தேவாலயம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டுப்பட்டு இருப்பதாக வெளியான வீடியோவை பகிர்ந்தது தொடர்பாக, பாஜக பெண் நிர்வாகி மீது காவல்துறை 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது. ஏற்கனவே மாநில பாஜக இளைஞர் அணி நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்துவ பள்ளியில் படித்து வந்த இந்து மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் சர்ச்சையை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சில வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது மரணம் அரசியலாக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ள நிலையில், அதுகுறித்து யாரும் கண்டுகொள்ளாத நிலையில் கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட பாஜக பெண் நிர்வாகியான செயற்குழு உறுப்பினர் சவுதாமணி மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதக்கலவரத்தை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.
முன்னதாக சமுக வலைதளங்களில் சென்னை கொடுங்கையூரில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சர்ச்-ஐ அகற்ற வலியுறுத்தி வீடியோ வெளியானது. இதை சவுதாமணி பகிர்ந்திருந்தார். இது வைரலானது. இதையடுத்து, அவர்மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அவர் மீது அரசுக்கு எதிராக கலகம்செய்யத் தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய இரு பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
ஏற்கனவே கடந்த 28-ம் தேதி, பாஜக நிர்வாகி வினோஜ் பி.செல்வம் மீது மதக்கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதாக, சைபர் கிரைம் போலீஸார் 3 பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.