மும்பை:

பிரதமர் நரேந்திர மோடியின் ஊழல் ஒழிப்பு மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய (சிவிசி) இணைய தளம் கடந்த 4 மாதங்களாக செயல்படாமல் முடங்கியுள்ளது.

சிவிசி ஆன்லைன் போர்டலின் ஹார்டு டிஸ்க் கடந்த நவம்பர் 28ம் தேதி சேதமடைந்துவிட்டது. இதனால் அதில் பதிவாகியிருந்த அனைத்து தகவல்களும் முற்றிலும் அழிந்துவிட்டது. ஆன்லைனில் ஏற்பட்ட இந்த கோளாறு கண்டறியப்பட்டுவிட்டாலும், அழிந்த தகவல்களை திரும்ப பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த போர்டலை டாடா கன்சல்டன்சி சேவை நிறுவனம் பராமரித்து வந்தது. இந்த நிறுவனத்துடனான சிவிசி.யின் ஒப்பந்தம் கடந்த டிசம்பருடன் முடிந்துவிட்டது. இந்த இரு தரப்புக்கும் இடையே வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தம் ஏதும் இல்லை. இந்த சம்பவத்துக்கு பிறகு சிவிசி போர்டல் பராமரிப்பை இந்த ஆண்டு மத்திய இணை சேவை அமைப்பான தேசிய தகவலியல் மையம் (என்ஐசி) மேற்கொள்ள தொடங்கியுள்ளது. என்ஐசி.யும் அழிந்துபோன தகவல்களை திரும்ப பெற முயற்சித்து வருகிறது. ஆனால் அது பலனளிக்கவில்லை.

இது தொடர்பாக சிவிசி ஆணையர்கள் ராஜிவ், பாசின், செயலாளர் நிலம் சாவ்னி, கூடுதல் செயலளர் சலிம் ஹக், இயக்குனர் ஜோதி திரிவேதி ஆகியோரிடம் விளக்கம் கேட்க மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் வீணானது. தற்போது புதிதாக பெறப்படும் புகார்கள் தொடர்பான தகவல்கள் மட்டுமே சிவிசி வசம் உள்ளது. இதற்கு முந்தைய வழக்குகள் தொடர்பான அனைத்து தகவல்களும் நிரந்தரமாக அழிந்துவிட்டது.

இதில் அதிகப்படியாக ஊழல் நடந்த மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி கட்டுப்பாட்டில் உள்ள தேசிய ஜவுளி கழக வழக்கும் அடங்கியுள்ளது. மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலர் கோசியா என்பவர் 2013ம் ஆண்டில் பதிவான இந்த வழக்கு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தெரிவிக்குமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அளித்தார்.

கோசியா என்டிசி பாதுகாப்பு மற்றும் ஊழல் பிரிவு துணை மேலாளராக இருந்தார். இவர் பதவி வகித்த காலத்தில் பல ஊழல்களை வெளி கொண்டு வந்தார். அதில் இந்த வழக்கும் ஒன்று. கடந்த 2016ம் ஆண்டு இவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த வழக்கில், மும்பையில் உள்ள என்டிசி.க்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு குடோனை ஓம் வாஸ்து சாந்தி என்ற தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு ரூ. 75 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த பரிமாற்றம் முறைப்படி ஏலம் கோரப்பட்டு நடைபெறவில்லை. அமைச்சகம் மற்றும் வாரிய இயக்குனர்கள் அனுமதி பெறாமல் வழங்கப்பட்டது.

இந்த புகாரில் தற்போதைய என்டிசி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான பிசி வைஷ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவர் அப்போது என்டிசி நிதிப்பிரிவு இயக்குனராக இருந்தார். இந்த ஒப்பந்தம் கடந்த 2013ம் ஆண்டு நடந்தது. இதில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது.

இத் வழக்கு மீது மேற்கொள்ளப்பட் நடவடிக்கைகளை தெரிவிக்குமாறு, சிவிசி.யிடம் கோசியா பல முறை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்யப்பட்டும் எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை. பின்னர் இது குறித்து மத்திய தகவல் ஆணையத்திடம் புகார் அளித்தவுடன் விடிவுகாலம் பிறந்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் 22ம் தேதி சிவிசி இயக்குனர் தகவல் அளிக்கும் அதிகாரியுமான ஜோதி திரிவேதியிடம் இருந்து பதில் வந்தது. அதில் தொழில்நுட்ப பிரச்னையால் இந்த வழக்கின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த தகவல்களை தற்போது அளிக்க முடியவில்லை என் தெரிவித்திருந்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சிவிசி கூடுதல் செயலாளர் பிரவீன் சின்கா தான் அதிகாரப்பூர்வ அதிகாரி என்று என்று தெரிவித்திருந்தார்.

திரிவேதி அளித்துள்ள பதில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சரியானதாக இல்லை என்று சின்காவுக்கு கோசியா கடிதம் எழுதினார். இதையடுத்து கடந்த ஜனவரி 24ம் தேதி சின்ஹா அளித்த பதிலில்,‘‘இந்த வழக்கு தொடர்பான பதிவேடுகளை ஆய்வு செய்தேன். தங்களுக்கு பதில் அளித்த சமயத்தில் சிவிசி ஆன்லைன் போர்ட்டல் செயல்படவில்லை. அந்த சூழ்நிலையை தான் திரிவேதி தெரிவித்துள்ளார். தங்களது மனு மீதான தகவல்களை 15 நாட்களில் வழங்க சம்மந்தப்பட்ட தகவல் அளிக்கும் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு அடுத்தபடியாக கடந்த மாதம் 9ம் தேதி ஜோதி திரிவேதி, கோசியாவுக்கு மீண்டும் ஒரு கடிதம் அனுப்பினார். அதில், ‘‘ ஆணையத்தின் டிசிஎஸ் திட்டம் இன்னும் செயல்படவில்லை. அதனால் சம்மந்தப்பட்ட வழக்கு மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்த தகவல்கள் தற்போதைய சூழ்நிலையில் வழங்க இயலவில்லை என்று தெரிவித்துள்ளார்.

‘‘இதன் பின்னர் கோசியா இரண்டாவது முறையாக மத்திய தகவல் ஆணையத்துக்கு ஒரு கடிதம் எழுதினார். டிசிஎஸ்&சிவிசி இடையிலான ஒப்பந்தம் முடிவடைய ஒரு மாதம் இருக்கும் சமயத்தில் சிவிசி தகவல்கள் அழிந்துள்ளது. பழைய தகவல்களை மீண்டும் எடுக்கும் வகையில் இரு தரப்புக்கும் இடையே எவ்வித ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தமும் இல்லை. இதன் பின்னால் பெரிய சதி இருக்கிறது. பிரதமர் இதில் தலையிட்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கோசியா தெரிவித்துள்ளார்.