கேரளாவின் வயநாட்டில் உள்ள கனியம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மிதுன் பாபு அக்டோபர் 30ம் தேதி அமேசானில் பாஸ்போர்ட் பவுச் ஓன்றை வாங்கியிருந்தார்.

இரண்டு நாள் கழித்து நவம்பர் 1ம் தேதி தனக்கான பவுச் வந்ததும் ஆர்வமுடன் திறந்து பார்த்தவருக்கு அதில் ஒரு பாஸ்போர்ட் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அமேசான் வாடிக்கையாளர் மையத்துக்கு போன் செய்த மிதுன் பாபுவுக்கு “இனி இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்கிறோம்” என்று வேறு ஏதும் தகவல் உண்டா என்ற பாணியில் பேசியது அவருக்கு மேலும் அதிர்ச்சியைத் தந்தது.

களத்தில் இறங்க தீர்மானத்தவர் பாஸ்போர்ட்டில் இருந்த திருச்சூரை சேர்ந்த முகமத் சாலி என்பவரை நேரடியாக தொடர்பு கொண்டார்.

அப்போது அவர் இது தன்னுடைய பாஸ்போர்ட் தான் என்றும் அமேசானில் தான் ஆர்டர் செய்த பவுச் பிடிக்காத காரணத்தால் அதை திருப்பி அனுப்பியதாகவும் அதனுள் வைத்த தனது பாஸ்போர்ட்டை எடுக்க மறந்து விட்டதாகவும் கூறியிருக்கிறார்.

இந்த விவகாரம் வெளியில் தெரிந்ததும் வாடிக்கையாளரிடம் இருந்து பல்வேறு காரணங்களுக்காக வேண்டாம் என்று திரும்பவரும் பொருட்களை முறையாக பரிசோதிக்காமல் அடுத்த வாடிக்கையாளருக்கு அனுப்பி வைத்த அமேசான் நிறுவனம் மீது விமர்சனம் எழுந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் ரூ 70000 மதிப்புள்ள ஐபோன் ஆர்டர் செய்த நிலையில் அவருக்கு ஐபோனுக்கு பதில் 5 ரூ விம் பாருடன் சோப்பு டப்பா வந்ததோடு அவருக்கு வரவேண்டிய ஐஎம்இஐ எண் (IMEI Number) கொண்ட போன் ஜார்கண்டில் உள்ள ஒருவருக்கு ஒரு மாதம் முன்பே விற்ற விவகாரம் ஏற்படுத்திய பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் இந்த புதிய குளறுபடி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.