சென்னை: தமிழ் தகுதி தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் குறித்து டி.என்.பி.எஸ்.சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு பணிகளையும் வடமாநிலத்தவர் கைப்பற்றி வருகின்றனர். கடந்த ஐந்தாண்டுகளில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர்,  அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் தமிழில் படித்த தமிழக இளைஞர்களுக்கு அரசுப் பணி கனவாகிப் போனது. இதையடுத்து, தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ் கட்டாயம் என்று ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. மேலும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் குறைந்தது 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் தமிழக இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையடுத்து,  தமிழக அரசு வேலைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பும் வேலைகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மேற்கொண்டு வருகிறது. அதைத்தொடர்ந்து,  தமிழ் தகுதி தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாளை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.

அதில், தற்கால நிகழ்வுகள், சமுதாயப் பிரச்சினைகள், சுற்றுச்சூழல் தொடர்பான தலைப்புகள், இந்தியப் பொருளாதாரம் தொடர்பான தலைப்புகள், அறிவியலும் தொழில் நுட்பமும், கலையும் பண்பாடும், பகுத்தறிவு இயக்கங்கள் – திராவிட இயக்கங்கள், சுயமரியாதை இயக்கம், இக்காலத் தமிழ்மொழி – கணினித் தமிழ், வழக்கு மன்றத் தமிழ், அலுவலக மொழியாகத் தமிழ், புதிய வகைமைகள், தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார முன்னேற்றம், தமிழக அரசின் நலத்திட்டங்கள், சமூக நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதலில் சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு, இட ஒதுக்கீடும் அதன் பயன்களும், தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் சமூக நீதி மற்றும் சமூக ஒற்றுமையின் பங்கு உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. மேலும் இலக்கணப் பகுதியில் பொருத்துதல்,

தொடரும் தொடர்பும் அறிதல், பிரித்தெழுதுக, எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல், பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல், பிழை திருத்தம், ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல், ஒலி வேறுபாடறிதல், வேர்ச்சொல்லை தேர்வு செய்தல், இலக்கணக் குறிப்பறிதல் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கின்றன. இலக்கியப் பகுதியை பொருத்தவரை திருக்குறள், அறநூல்கள், கம்பராமாயணம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரியபுராணம், சிற்றிலக்கியங்கள், மனோன்மணியம், பாஞ்சாலி சபதம், நாட்டுப்புறப்பாட்டு,  சமய முன்னோடிகள் உள்ளிட்ட பாடங்கள் இருக்கின்றன.

தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் என்ற தலைப்பில் பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், புதுக் கவிதை ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல் ரகுமான், தமிழில் கடித இலக்கியம், நாடகக்கலை, சிறுகதைகள் தலைப்பு, கலைகள், தமிழின் தொன்மை, உ.வே.சாமிதாத ஐயர் தொடர்பான செய்திகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.