கொழும்பு:
இலங்கையிலுள்ள கம்பஹா மாவட்டத்தின் ஒரு தொழிற்சாலையில் 800-க்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மீண்டும் இலங்கையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் முழுஅடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் அரசு அறிவிப்பு வரும் வரை பொதுக்கூட்டங்கள் கூட கூடாது என்றும் மக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் இலங்கை சுகாதாரத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இலங்கையின் கம்பஹா பகுதியில் உள்ள ஆடை ஏற்றுமதி தொழிற்சாலையில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவ்விடத்தில் மட்டும் காலவரையற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, இந்த தொழிற்சாலையில் ஏறத்தாழ ஆயிரம் பேர் வேலை செய்கின்றனர் என்று தெரியவந்த பின்னர், தொழிலாளர்கள் அனைவருக்கும் பிசிஆர் சோதனை செய்யப்பட்டது.
பிசிஆர் சோதனையில் 800க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது.
இதனால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, கடுமையான காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இந்த பாதுகாப்புக்கு ராணுவ தளபதி சவேந்திர சில்வா தலைமை தாங்குகிறார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் விதிகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்றும், அரசுக்கு ஒத்துழைக்குமாறும் சுகாதாரத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.