மும்பை

ல முக்கியமான வழக்குகளை விசாரித்து வரும் மும்பை வருமான வரி அலுவலகக் கிளையில் பீரோக்கள் உடைக்கப்பட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

மும்பை நகர வருமான வரி அலுவலக கிளையில் பல முக்கியமான வழக்குகள் சம்பந்தப்பட்ட கோப்புகள் வைக்கப்பட்டுள்ளன.  இவற்றில் தீபக் கோச்சார் – ஐசிஐசிஐ வழக்கு மற்றும் அம்பானி குடும்ப கருப்புப் பண வழக்கு ஆகியவை குறிப்பிடத்தக்கவைகள் ஆகும்.   இந்த அலுவலகக் கட்டிடத்தில் ஆறு மாடிகள் உள்ளன.  இவற்றில் ஒவ்வொரு மாடியிலும் 80 அறைகள் உள்ளன.

வருமான வரித்துறை அலுவலகம் விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்குப் பிறகு செப்டம்பர் 2 ஆம் தேதி அன்று திறக்கப்பட்ட போது  நான்காம் மாடியில் உள்ள ஒரு ஆணையரின் அறையில் உள்ள இரும்பு பீரோ உடைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.   இந்த அலுவலக ஆணையர் அல்கா தியாகி என்பவர் மேலே குறிப்பிட்ட வழக்குள் உள்ளிட்ட பல முக்கிய வழக்குகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த அலுவலகத்தைத் திறந்த காவலர்கள் பீரோ உடைக்கப்பட்டதையும் அதிலிருந்த பல கோப்புக்களின் தாள்கள் பிய்க்கப்பட்டு கீழே வீசப்பட்டதையும் கண்டு தகவல் அளித்ததாகக் கூறப்படுகிறது.   இது குறித்த தகவலை உடனடியாக அதிகாரிகள் வெளியிடவில்லை.   இது குறித்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்படாததால் காவல்துறை எவ்வித அறிக்கையும் பதியவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த அலுவலகத்தின் கண்காணிப்பு காமிரா பதிவுகளைச் சோதனை இட அதிகாரிகள் வந்த போது இந்த விவகாரம் வெளி வந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.  இது குறித்துப் பாதுகாப்பு காவல் அதிகாரி எதையும் தெரிவிக்க மறுத்துள்ளார்.   இந்த அலுவலகம் முழுவதும் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டிருந்த போதிலும் ஒரு சில காமிராக்களால் கண்டுபிடிக்க முடியாத இடங்களும் உள்ளதாக பெயர் தெரிவிக்க விரும்பாத அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.