சென்னை:

மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை சீன அதிபருடன் பிரதமர் மோடியும் உற்சாகமாக  கண்டுகளித்தார். கலைநிகழ்ச்சிகள் குறித்து சீன அதிபர் ஜின்பிங்கிற்கு சீன மொழியில் மொழி பெயர்ப்பாளர் எடுத்துரைத்தார்.

நேற்று மதியம் சென்னை வந்த சீன அதிபர் மாலை மாமல்லபுரம் சென்றடைந்தார். அவருக்கு வழிநெடுகிலும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆங்காங்கே கலைநிகழ்ச்சிகளுடன், வண்ண வண்ண தோரணங்களும், சாலையின் இருபுறமும் பொதுமக்கள் அணிவகுத்து நின்ற இந்திய சீன அதிபர் இடம்பெற்ற பதாதைகைள வைத்துக்கொண்டு வரவேற்றனர்.

மாமல்லபுரம் வந்தடைந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை, பிரதமர் மோடி தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, துண்டி அணிந்து வரவேற்றார். தொடர்ந்து இரு தலைவர்களும் அங்குள்ள புராதன சிற்பங்களை கண்டுகளித்தனர். அப்போலு, ஒவ்வொரு சிற்பத்தையும் பிரதமர் மோடி, சீன அதிபருக்கு சுட்டிக்காட்டி விளக்கினார்.

மாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டை பாறை முன் இருவரும் கைகளை கோர்த்து உயர்த்தி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயிலுக்கு பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சென்றனர். கடற்கரை கோயில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டிந்த மேடையில் கலைநிகழ்ச்சிகள் தொடங்கின.

கலை நிகழ்ச்சிகளை சீன அதிபருடன் பிரதமர் மோடியும் சேர்ந்து கண்டுகளித்தார். பரதநாட்டியம், கதகளி உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகளை இருவரும் கண்டு ரசித்தனர். இந்த கலை நிகழ்ச்சிகளில் ராமாயண காவியம் நடன வடிவில் நிகழ்த்தப்பட்டது. அந்த நேரத்தில் ராமாயண காட்சி, நாட்டிய நிகழ்ச்சி குறித்து சீன அதிபருக்கு அவ்வப்போது பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.

தொடர்ந்து சீன அதிபர் ஸி ஜின்பிங்கிற்கு நினைவுப் பரிசுகளாக நாச்சியார் கோயில் அன்னம் விளக்கு, தஞ்சை நடனமாடும் சரஸ்வதி ஓவியத்தை பிரதமர் மோடி வழங்கினார். தமிழ்நாடு கைவினைப்பொருட்கள் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட பரிசுகளையும் பிரதமர் மோடி சீன அதிபருக்கு வழங்கினார்.