சென்னை:
விடுமுறை நாட்களின்போது, பள்ளிகளில், ஓய்வுபெற்ற தமிழாசிரியர்களை கொண்டு பண்பாடு, கலாச்சாரம் தொடர்பாக வகுப்பு எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழக அரசு இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழ்கிறது என்றும், கல்வித்துறையில், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மூலம் பாடம் நடத்தும் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்று தெரிவித்தவர், அடுத்த மாத இறுதிக்குள் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்றார்.
தொடர்ந்து பேசியவர், இணையதள கல்வி பயன்பாட்டிற்காக, ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளிகளுக்கு 10 கணினிகளும், மேல்நிலைப் பள்ளிகளுக்கு 20 கணினிகளும்,விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்ட வருகிறது என்றார்.
மேலும், பள்ளி விடுமுறை நாட்களின்போது, பள்ளிகளில், ஓய்வுபெற்ற தமிழாசிரியர்களை கொண்டு பண்பாடு, கலாச்சாரம் தொடர்பாக வகுப்பு எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், கர்நாடக மாநிலத்தில் தமிழ் ஆசிரியர்களுக்கு நிலவும் பற்றாக்குறை தொடர்பாக அந்த மாநில முதலமைச்சர், தங்களுக்கு கடிதம் எழுதினால் ஆலோசிக்கப்படும் என்றார்.