சென்னை:

பேராசிரியை ஆடியோ வெளியான விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற முயற்சி செய்யவில்லை என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து தொடர்பான ஆடியோ வெளியானது. இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் குறித்து தமிழக கவர்னரும், மதுரை காமராஜ் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘மாணவிகளை பேராசிரியர் தவறாக வழிநடத்திய சம்பவம் கண்டனத்திற்குரியது. விசாரணை அதிகாரி சந்தானம் சமர்பிக்கும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு வாரத்தில் சந்தானம் கமிட்டி தனது அறிக்கையை தாக்கல் செய்யும். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை ஆணையம் அமைப்பதற்கு ஆளுநருக்கு அதிகாரம் உண்டு.

குற்றச்சாட்டு உறுதிசெய்யப்படும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சி.பி.ஐ. விசாரணை அவசியமில்லை. குழு அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விஷயத்தில் யாரையும் காப்பாற்ற முயற்சி செய்யவில்லை’’ என்றார்.