புதுச்சேரி:

டலூர் தொழிலாளி காய்ச்சல் காரணமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட நிலையில், அவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில், அவரது ரத்தம்  புனே ஆய்வு கூடத்துக்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு ஆய்வு செய்யப்பட்டதில், அவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கேரள மாநிலத்தில் கொச்சி பகுதியில் பயமுறுத்து வரும்  உயிர்கொல்லி நோயான நிபா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதில் 47 பேருக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்திலும் நிபா வைரஸ் பரவாமல் எல்லையோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலம் குருவாயூர் அருகே உள்ள வெட்டக்காடு என்ற இடத்தில் கட்டுமான தொழில் செய்து வந்த  கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்த தொழிலாளி காய்ச்சல் காரணமாக சொந்த ஊர் திரும்பிய நிலையில், புதுவை  ஜிப்மரில் சேர்க்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த ஜிப்மர் நிர்வாகம், அவருக்கு நிபா தொற்று இருக்கலாம் என சந்தேகம் அடைந்ததது. அதையடுத்து, அவரது  ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, புனே ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பரிசோதனை அறிக்கை இப்போது ஜிப்மருக்கு வந்துள்ளது. அதில் அந்த நோயாளிக்கு நிபா வைரஸ் தாக்குதல் எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடுமையான காய்ச்சல் காரணமாக சிகிச்சை  பெற்று வந்த அந்த தொழிலாளி யின்  உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இயற்கை சுவாச கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.