பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்று உயர்ந்த வாழ்க்கைத் தரமும், நவீன மருத்துவ வசதிகளும் கொண்ட நாடு இத்தாலி. கொரோனாத் தொற்றிலிருந்து மீள இத்தாலிக்கு மருத்துவ உதவிகள் செய்ய மருத்துவ குழுவை அனுப்பிய சின்னஞ்சிறு நாடு கியூபா. இது எப்படி சாத்தியம்… கியூபாவின் மனவலிமையே அதற்கு காரணம்.  அவர்களின் வலிமையில் முருங்கைக் கீரைக்கு பெரும் பங்குண்டு.

வலிமையான மனதிற்கு வலிமையான உடல் மிகவும்  அவசியம். நம் உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க விலையுயர்ந்த செயற்கை ஊட்டப் பொருட்கள் மற்றும்  மருந்துகளை நம்பத் தேவையில்லை.  நம் வீட்டிலிருக்கும் முருங்கைக் கீரையே போதும். வாரம் இருமுறை முருங்கை கீரையை உணவாக எடுத்துக் கொண்டால் அபரிமிதமான சத்துக்களை அள்ளித் தரும். விட்டமின் ஏ, சி, பீட்டா கெரோட்டின், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், புரதம் உள்ளிட்ட சத்துகள் அதிக அளவில் உள்ளன.

 

ஒரு முருங்கை மரம் ஆண்டில் இருவேறு சுவை தரும் தனித்துவம் கொண்டது. சில மாதங்கள் வரை சிறு கசப்பும், பின்பு நல்ல சுவையுடனும் இருக்கும். சிறு கசப்பாக இருக்கையில் விட்டமின் ஏ அதிகமாகவும், கசப்பற்ற போது விட்டமின் சி அதிகமாகவும் இருக்கும்.  இலை, காய், பூ, வேர்,பட்டை, பிசின் என அனைத்தும் நம் உடலை வலுவாக்கும். அதில் குறிப்பாக முருங்கைக் கீரை இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டது.

முருங்கையின் வெறும் இலைகளை நிழலில் உலர்த்தி, பொடியாக்கி காலையில் இரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால்  ஹீமோகுளோபின் அளவு நம் உடலில் அதிகரிக்கும்.

மூருங்கைக் கீரையை  சத்து நிறைந்த பொருளாக உலக மக்களின் மனங்களில் பதியவைத்ததில் கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோவுக்கு பெரும் பங்குண்டு. ” வல்லரசான அமெரிக்காவை எதிர்க்க கியூப மக்கள் ஆயுதங்களை ஏற்க வேண்டியதில்லை. தங்கள் உடலை வலிமையாக்கினாலே போதுமானது. எதிரிகளின் எந்தத் தடைகளையும் நம் வலிமையான மனதாலும், உடலாலும் வெல்லலாம்” என்றார்.

அதனால் தான் இன்றுவரை கியூபாவின் வீடுகளில் முருங்கை மரம் இருக்கும். கியூப மக்களுக்கு தொடக்க காலத்தில் அரசே முருங்கைப் பொடியை வீடுகள் தோறும் வழங்கியது. அதன் மகத்துவம் உணர்ந்த அம்மக்கள் தற்போது வரை முருங்கைப் பொடியை சாப்பிட மறந்ததில்லை.

எளிய கீரையின் அளப்பரிய  நன்மைகளை உணர்ந்து அதன் வழியே நம் உடலை திடமாக்கி மனதையும் வலிமையாக்குவோம்…