டெல்லி:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய போது கேப்டன் தோனி தன்னை ஓல்டு மேன் என கிண்டல் செய்ததாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் டுவைன் ப்ராவோ தெரிவித்துள்ளார்.
கொரோனாத் தொற்று காரணமாக உலகின் பெரும்பகுதியில் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதனால் பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து வருகின்றனர்.
செலிப்ரிட்டிகள் பலரும் தங்கள் ரசிகர்களோடு இன்ஸ்டா உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் தொடர்ச்சியாக பேசி வருகின்றனர்.
ஐபிஎல் போட்டிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், வீரர்கள் பலரும் தங்களின் கிரிக்கெட் நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்கின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ப்ராவோ சிஎஸ்கே கேப்டன் தோனி குறித்த நினைவுகளை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அது தொடர்பான வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார்.
” 2018 இல் நடந்த ஐபிஎல் போட்டிகளின் போது கேப்டன் தோனி தன்னை ஓல்டு மேன் எனவும், மிகவும் மெதுவாக இருப்பதாகவும் அடிக்கடி கூறுவார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, நான் உங்களைவிட வேகமானவன். போட்டிக்கு பிறகு பிட்சில் அதைப் பார்க்கலாம் என்றேன்.
ஆனால் இருவருக்குமான அந்த போட்டியில் நூலிழையில் தோனி வெற்றி பெற்றுவிட்டார், அதில் எனக்கு மகிழ்ச்சிதான்” என ப்ராவோ தெரிவித்துள்ளார்.
மேலும் சிஎஸ்கே விற்காக ஆடும்போது என் திறமை மீது முழு நம்பிக்கை வைத்த பயிற்சியாளர் ஸ்டீஃபன் ப்ளமிங் மற்றும் கேப்டன் தோனிக்கு ப்ராவோ தனது உளப்பூர்வ நன்றிகளையும் பகிர்ந்துள்ளார்.
இந்திய ரசிகர்கள் பலரும் ப்ராவோவின் வெளிப்படையான பேச்சை ரசித்துப் பாராட்டி வருகின்றனர்.