மெய்நிகர் நாணயம் என்று சொல்லப்படுகிற கிரிப்டோ கரன்சி-யில் முதலீடு செய்வது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பில் கேட்ஸ், “இதில் முதலீடு செய்வது மிகவும் ஆபத்தானது மட்டுமல்ல முட்டாள் தனமானதும் கூட” என்று எச்சரிக்கை செய்தார்.

கடந்த சில மாதங்களாக கிரிப்டோ கரன்சி-யின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்து வருவதை கருத்தில் கொண்டு கேட்கப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.

மேலும், “இந்த நாணயங்கள் ஊக வர்த்தகத்தில் லாப மீட்டுவது போல் தோன்றினாலும், இந்த பணத்தில் பெரும் பங்கு சமூக விரோத செயல்களுக்கும், தீவிரவாத குழுக்களுக்கு மட்டுமே பயன்படுகிறது.

இந்த வகையான கரன்சி-களை, வைத்திருப்பவர் குறித்த தகவல், எதுவும் யாருக்கும் தெரியாது என்பதால், இது சட்டத்திற்கு புறம்பான காரியங்களுக்கே பெரும்பாலும் செலவிடப்படுகிறது.

இது தவிர, இதில் முதலீடு செய்வது என்பது பணத்தை பதுக்கி சொத்தாக சேர்த்து வைப்பதற்கு மட்டுமே உதவுவதால், இந்த பணம் முதலீடாக கருத முடியாது, ஊக வர்த்தகத்தில் முதலீடு செய்வது எப்பொழுதும் உயர்வை தரும் என்று நம்ப முடியாது” என்று உலகின் இரண்டாவது பெரிய பணக்காரரான பில் கேட்ஸ் கூறினார்.

சில ஆண்டுகளுக்கு முன், மெய்நிகர் நாணயம் பற்றி கூறியபோது, நடுநிலையான பதிலை கூறியிருந்த கேட்ஸ், தற்போது கிரிப்டோ கரன்சி இல்லாமலே உலகம் மேம்படும் என்று கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.