நேபிடாவ்

மியான்மர் ராணுவப் பக்கத்தை முகநூல் நிர்வாகம் நீக்கி உள்ளது.

மியான்மரில் வெகு நாட்களாக ராணுவ ஆட்சி நடந்து வந்தது.  அதன் பிறகு ஆங் சான் சுயி தலைமையில் ஜனநாயக ஆட்சி மலர்ந்தது.   அப்போது ரோகிங்கியா இஸ்லாமியர் மீதான தாக்குதல் குறித்து அவர் மீது கடும் அதிருப்தி வெடித்தது.   ஆயினும் கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் மீண்டும் அதிபராக ஆங் சான் சுயி வெற்றி பெற்றார்.

தற்போது மியான்மரில் ராணுவப் புரட்சி வெடித்து மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆங் சான் சுயி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.   ஆயினும் மியான்மர் ராணுவம் எதிர்ப்பை ஒரு பொருட்டாக மதிக்காமல் இருந்து வருகிறது.

முகநூலில் மியான்மர் ராணுவம் டாட்மடா என்னும் பெயரில் ஒரு பக்கத்தை அமைத்துள்ளது.  இந்த பக்கத்தை முகநூல் நிர்வாகம் தற்போது நீக்கி உள்ளது.  முகநூலில் உலகளாவிய கொள்கைகளை மீறி வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டதால் இந்த பக்கம் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலின் இந்த நடவடிக்கை குறித்து மியான்மர் ராணுவ செய்தி தொடர்பாளரைச் செய்தியாளர்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.  ஆனால் அவர் இது குறித்து பதில் அளிக்க மறுத்துள்ளார்.