இந்த கொரோனா தொற்று காலத்தில் எத்தனையோ பேர் மனிதநேயத்துடன் தேவையிலிருப் போருக்கு உணவு மற்றும் அரிசி, மளிகை பொருட்கள், மருந்து பொருட்கள் என்று வழங்கி வருவதை தினந்தோறும் பார்க்கிறோம். ஆனால் அதே நேரம் கொரோனா தொற்று பாதிக்கப்பட் டோரை ஒதுக்கி வைப்பதும், அதனால் இறந்தோரை தங்கள் பகுதியில் அடக்கம் செய்யக்கூடாது என்று கொஞ்சமும் இரக்கமின்றி போராடும் மனிதர்களும் இங்கே இருப்பதையும் பார்க்கிறோம்.
52 வயதான ரவி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போர்ட்டராக பணிபுரிகிறார். இவர் திருமணமாகாதவர் என்பதால் அந்த பகுதியிலேயே ஓர் அறையை வாடகைக்கு எடுத்து நண்பர்களுடன் தங்கி வருகிறார். ஆனால் இந்த கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின், ஜாபர்கான்பேட்டையிலுள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு வந்து விட்டார். இவர் ஒரு ஆஸ்த்மா நோயாளி என்பதால் கடந்த செவ்வாய் அன்று தொடர் இருமலால் அவதிப்பட்டுள்ளார். உடனே அந்த வீட்டு ஓனரும், அக்கம்பக்கத்தாரும் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டதாக கருதி கார்ப்பரேஷன் அதிகாரிகளை தொடர்பு கொள்ள, அவர்களும் இவரை அழைத்துச்சென்று ரத்த மாதிரிகளை எடுத்துக்கொண்டு அன்றே திரும்பவும் வீட்டிற்கு அனுப்பிவிட்டனர்.
அவ்வளவு தான். வீட்டு ஓனரும், அந்த அண்ணாத்துரை தெருவாசிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ரவியை அவரது சகோதரியுடன் தங்கக்கூடாது என்று விரட்ட, அவரும் வேறு வழியின்றி அங்கிருந்து வெளியேறி, அந்த கொளுத்தும் வெயிலிலும் புதன்கிழமை முழுவதும் தெருவிலேயே கிடந்துள்ளார். உண்ண உணவு, குடிக்க தண்ணீரோ கூட இல்லாமல் கிடந்த இவரை யாருமே கவனிக்கவில்லை.
வியாழனன்று காலையில் அப்பகுதி கார்ப்பரேஷன் ஊழியர்கள், அவரது சகோதரியின் வீட்டிலிருந்து 100 மீ அருகிலேயே இவர் விழுந்து கிடந்ததை அறிந்து, ஆம்புலன்ஸ்ஸை அழைத்துள்ளனர். அவர கள் வந்து பார்த்தபோது தான் ரவி ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்துள்ளது.
ஆனால் கொரோனா தொற்று பயத்தால் ஒருவரும் அவரது உடலை எடுத்துச்செல்ல முன்வராத நிலையில், மாலை 5 மணி வரை அவரது உடல் தெரு ஓரமாகவே கேட்பாரற்று கிடந்துள்ளது.
பிறகு தகவலறிந்த கோடம்பாக்கம் மண்டல அலுவலக அதிகாரிகள், அப்பகுதி காவலர்களுடன் சேர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் உடலை இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சூழலிலும் அந்த வீட்டு ஓனர் குமரன் நகர் காவல் நிலையம் சென்று, ரவியின் ஈமச்சடங்குகள் தனது வீட்டில் நடக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார். காவல்துறையினர் அதுபற்றி முடிவெடுக்க வேண்டியது அவரது குடும்பத்தினர் தான் என கூறி அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
பின்னர் அன்று மாலையில் இறந்தவரின் சகோதரரின் மகன் வந்து உடலை பெற்றுச்சென்றுள்ளார்.
கடைசியில், ரவிக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று ஏதுமில்லை என்று வந்துள்ளன முடிவுகள்.
-லெட்சுமி பிரியா