டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்பட எரிபொருட்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 85 டாலராக உயர்ந்துள்ளது. இதனால், இந்தியாலும் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை தினசரி உயர்ந்து வருகிறது. எரிபொருள் விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் இந்தியாவில் எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பது குறித்து அத்துறை சார்ந்த சர்வதேச நிறுவனங்களின் தலைவர்கள், தலைமை அதிகாரிகள், அத்துறை நிபுணர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
ஏற்கனவே கச்சா எண்ணெய் விலை உயர்வு பல்வேறு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும், இதனால், கச்சா எண்ணெய் விலையை குறைப்பது குறித்து எண்ணெய் வள நாடுகளுடன் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பேசி வருவதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான வரி மிக அதிகளவில் இருப்பதுதான் அவற்றின் விலை 100 ரூபாய்க்கு மேல் இருப்பதற்கு காரணம் என்றும் எனவே வரிகளை குறைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு நெருக்கடிகள் இருந்து வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை மேற்கொள்கிறார்.