அயோத்தி: உ.பி. மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தினசரி பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 6 நாட்களில் 19 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க ஆன்மிக பூமியான அயோத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கடந்த 22-ம் (2023, டிசம்பர் 22ந்தேதி) தேதி திறக்கப்பட்டு, அங்கு குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. சுமார் 1800 கோடி ரூபாய் செலவில், பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு இந்த கோவிலைக் காண்பதற்காக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அயோத்தியில் முதல்நாளே திரண்டு இருந்தனர். இன்னமும் கூட்டம் குறையாததால், தற்போதும் பக்தர்களின் கூட்டத்தால், அயோத்தி திணறி வருகிறது. அயோத்தி இந்தியாவின் அதிக பக்தர்களை ஈர்க்கும் ஆன்மிகத் தலைநகராக மாறி வருகிறது. கடந்த 6 நாட்களில் மட்டும், 19 லட்சம் பக்தர்கள் குழந்தை ராமரைத் தரிசனம் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உ.பி. மாநில அரசு வெளியிட்டுள்ள தகவலில், பக்தர்களின் வருகையும் தரிசனமும் எந்தவொரு சிக்கலும் இன்றி நடைபெறுவதற்காக, முதலமைச்சர் யோகி ஆதித்யானாத்தின் நேரடி மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிரமம் இன்றி, பக்தி பரவசத்துடன் ராமரை தரிசப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளதாக உத்தப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
குறைந்த பட்சம் தினமும் 2 லட்சம் பக்தர்கள் குழந்தை ராமரை தரிசனம் செய்வதாகவும், கடந்த 23-ம் தேதி, அதாவது பொதுமக்கள் தரிசனத்திற்கு திறந்துவிடப்பட்ட முதல்நாளில் 5 லட்சம் பேரும், 24-ம் தேதி 2.5 லட்சமும், 25-ம் தேதி 2லட்சம் பேரும், குடியரசு தினமான 26-ம் தேதி 3.5 லட்சம் பேரும், 27-ம் தேதி 2.5 லட்சம் பேரும், 28-ம் தேதி 3.5 லட்சம் பேரும் அயோத்தி ராமரை தரிசனம் செய்துள்ளனர் என உத்தரப்பிரதேச அரசின் தகவல் தொடர்புத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கிடையில் பொதுமக்கள் ராமரை தரிசனம் செய்யும் வகையில் நாடு முழுவதும் இருந்து இந்தியன் ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. மேலும், விமானமும் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல், பக்தர்களின் காணிக்கையும் கோடிக்கணக்கில், குழந்தை ராமருக்கு குவிந்து வருகிறது திருப்பதி கோவிலை மிஞ்சும் அளவில், ரொக்கும் பரிசுப் பொருட்களும் குவிந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அயோத்தி ராமர் கோவில் குறித்து, பல்வேறு சர்ச்சைகளும் விமர்சனங்களும் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கத்தில் பக்தர்கள் கூட்டமும் அரசியல் ஆதாயமும் பெருகி வருவதாகவும் கட்டுரைகள் பதிவாகின்றன. எது எப்படி இருந்தாலும், ஒன்றை மட்டும் நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும். அது என்னவென்றால், பல்லாயிரக்கணக்கான பிரசித்தப் பெற்ற கோவில்களைக் கொண்ட ஆன்மிக பூமியான இந்தியாவின், புதிய ஆன்மிக தலைநகராக அயோத்தி மாறியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.