தமிழகத்தில் தீபாவளி வரும் 24 ம் தேதி திங்கட் கிழமை கொண்டாடப்பட இருக்கிறது.

25 ம் தேதி செவ்வாய் கிழமை அமாவாசை அன்று சூரிய கிரகணம் இருப்பதால் நோன்பு விரதம் இருப்பவர்கள் திங்களன்றே விரதம் இருந்து அன்று மாலை அமாவாசை திதி பிறந்ததும் விரதம் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதனால் இவர்கள் ஞாயிறன்றே தீபாவளி கொண்டாட இருக்கின்றனர்.

தீபாவளிக்கு அசைவம் சாப்பிடுபவர்கள் இதுபோல் இறுதினங்களிலும் கொண்டாட இருப்பதால் இந்த ஆண்டு ஆடு, கோழி விற்பனை முந்தைய ஆண்டுகளை விட அமோகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடலூர் மாவட்டம் வேப்பூர், கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி மற்றும் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஆகிய இடங்களில் இன்று வெள்ளிக்கிழமை சந்தை நடைபெறுகிறது.

அதிகாலையிலேயே சந்தையில் குவிந்த வியாபாரிகள் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் அங்கு விற்பனைக்கு கொண்டு வந்த ஆடு மற்றும் கோழியை வழக்கத்தை விட அதிகளவில் வாங்கிச் சென்றனர்.

வேப்பூரில் 4 கோடி ரூபாய்க்கும், குந்தாரப்பள்ளியில் 6 கோடி ரூபாய்க்கும், செஞ்சியில் 5 கோடி ரூபாய்க்கும் ஆடுகள் மற்றும் கோழிகள் ஏலம் போனதாகவும் அவை சந்தை துவங்கிய சில மணி நேரத்திலேயே விற்றுத் தீர்ந்ததாகவும் கூறப்படுகிறது.