சென்னை
முன்னாள் அதிமுக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடந்த சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்த எம் ஆர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவை ஹ்டேர்தலில் தற்போதைய திமுக அமைச்சரான செந்தில் பாலாஜியிடம் தோல்வி அடைந்தார். இவர் போக்குவரத்து துரை அமைச்சராக இருந்த போது பணி நியமனம், கொள்முதல் எனப் பல ஊழல்கள் செய்து வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் புகார் எழுந்தது.
இதையொட்டி லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினர் நேற்று கரூரில் மற்றும் சென்னையில் உள்ள அவரது இல்லங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட 26 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.25.56 லட்சம் ரொக்கப்பணம், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து மற்றும் முதலீட்டு ஆவணங்கள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வருமானத்துக்கும் அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளது நிரூபணம் ஆகி உள்ளதாகக் கூறப்படுகிறது. இதையொட்டி அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், அவர் மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர், அவரது பங்குதாரராக உள்ள உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் மீது பல பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளன.