சென்னை மாநகராட்சிக்கு கோடிக்கணக்கான ரூபாய் சொத்து வரி பாக்கியிருப்பதாக இணையதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தரவுகளின் படி 5 லட்சத்திற்கு மேல் சொத்து வரி நிலுவையில் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 499 ஆக உள்ளது.

5 லட்சத்திற்கு மேல் நிலுவையில் உள்ள மொத்தம் 499 பேரிடம் இருந்து ரூ, 65,90,98,080 சொத்து வரி வரவேண்டியுள்ளது, அதிகபட்சமாக அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனத்திடம் இருந்து மட்டும் ரூ. 3,36,13,581 சொத்து வரி நிலுவையில் உள்ளது.

இதில் ரூ. 25 லட்சத்திற்கு மேல் பாக்கி வைத்துள்ளவர்கள் 38 பேர் இதன் மொத்த மதிப்பு சுமார் 24 கோடி ரூபாய்.

10 லட்சம் முதல் 25 லட்சம் ரூபாய் வரை நிலுவை வைத்துள்ள 140 பேரிடம் இருந்து சுமார் ரூ. 20.5 கோடியும், 5 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் ரூபாய் வரை பாக்கி வைத்துள்ள 321 பேரிடம் இருந்து சுமார் ரூ. 21.5 கோடி ரூபாய் வரவேண்டியுள்ளது.

மென்பொருள் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள், தியேட்டர்கள், மால்கள் தவிர தொழிற்பேட்டைகளில் இயங்கி வரும் உற்பத்தி நிறுவனங்கள் என பலதரப்பினர் தங்கள் சொத்துவரியை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர்.

இதில் பெரும்பாலான சொத்துக்கள் வங்கி அடமானத்திலோ அல்லது வாரிசு உரிமை உள்ளிட்ட நில தொடர்பான வழக்குகள் காரணமாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் சொத்துவரி நிலுவை குறித்து இவர்கள் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கமுடியாத நிலையில் மாநகராட்சி உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் சில சொத்துக்கள் வில்லங்கம் காரணமாக இறந்து போனவர்களின் பெயரிலேயே பல ஆண்டுகளாக இருந்து வருவதும் சில இடங்களில் அமைந்துள்ள நிறுவனங்கள் தொழிலாளர் சங்கங்கள் அல்லது என்.சி.எல்.டி. மூலம் செயல்படுத்தப்பட்டு வருவதும் வரி வசூலிப்பதில் மாநகராட்சி அதிகாரிகளுக்கு சவாலாக அமைந்துள்ளது.

இதுதவிர, 5 லட்சத்திற்கும் குறைவான சொத்துவரி நிலுவையில் உள்ளவர்களின் விவரங்களையும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளவர்களின் திருத்தி அமைக்கப்பட்ட புதிய சொத்து வரி உள்ளிட்ட விவரங்களை அறிந்துகொள்ள மாநகராட்சி தனது இணையதளத்தில் வசதி செய்துள்ளது.