சென்னை:
சமீபத்தில் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்த இடங்களில் வருமான வரித்துறை, தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ள தேர்தல் ஆணையர், யார் மீது வழக்கு பதியப்படும் என்பது விரைவில் தெரிய வரும் என்று கூறினார்.
வேலூர் தொகுதியில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். இவர் வாக்காளர்க ளுக்கு பணம் கொடுக்க, பணத்தை பதுக்கி இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து கடந்த மாதம் 30ந்தேதி நள்ளிரவு காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீடு மற்றும் அவரது உறவினர்கள் மற்றும் திமுகவினர் வீடுகளில் அதிரடி சோதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பணம் கைப்பற்றப் பட்டது. துரைமுருகனுக்கு நெருக்கமான திமுக பிரமுகரின் சிமென்ட் குடோனிலும் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பணக் கட்டுகளில் தொகுதி எண், வார்டு எண், தெரு பெயர் உள்ளிட்டவை இருந்தன. இந்த நிலையில் வேலூரில் தேர்தலை நிறுத்த அதிமுக, பாஜக, பாமக , உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
அதைத்தொடர்ந்து வேலூர் தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்படும் என எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில், வேலூரில் பணம் பறிமுதல் செய்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது என்று தமிழக தேர்தல் அதிதாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வழக்கில் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதும் எப்ஐஆர் பதிவு செய்யப்படும் என்று கூறியவர், .யார் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்பது வழக்கு பதிவு செய்யப்படும் போதுதான் தெரியும் என்று கூறினார்.
மேலும், தமிழகம் முழுவதும் இதுவரை ரூ.122.29 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தாகவும், பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக 128 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.