திண்டுக்கல்: பட்டியல் சாதியினருக்கான  நிதியில் கோடிக்கணக்கில் மோசடி  நடைபெற்றுள்ளது  என கூறிய புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி,   2026 தேர்தலில் ஆட்சியில் பங்கு  என்பதே தங்களின் கொள்கை என்று தெரிவித்தார்.

ஆதிதிராவிடர் நலத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 500 கோடி நலத்திட்ட உதவிகளுக்கான திட்ட வெள்ளை அறிக்கையை திமுக அரசு வெளியிட தயாரா?  என கேள்வி எழுப்பிய டாக்டர் கிருஷ்ணசாமி,  தமிழ்நாட்டில் 60% மக்கள் தங்கள் வீடுகளில் மும்மொழிக் கொள்கைதான் பேசி வருகின்றனர். தமிழகத்திற்கும் மும்மொழிதான் பலனளிக்கும் என்று கூறியதுடன்,   வரும் 2026 தேர்தலில் ஆட்சி பகிர்வு என்று கொள்கைக்கான கூட்டணியை புதிய தமிழக கட்சி முன்னெடுக்கும் என கூறியுள்ளார்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி திண்டுக்கல்லில் செய்தியாளர்fளை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-  தமிழகத்தில் 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தான் எங்களது கொள்கை. அதை வைத்துத்தான் கூட்டணிகள் அமைய வேண்டும் என வலியுறுத்தியவர், வெறுமென்றே திமுகவை மாற்றுவதற்காக ஒரு கூட்டாணி என்பது ஆகாது.

தமிழ்நாட்டிற்கு நல்லது நடக்க வேண்டும் என்றால், ஆட்சி பகிர்வு என்ற லட்சியத்தோடு, அந்த குறிக்கோளோடுதான் ஆட்சி மாற்றங்கள் நடைபெற வேண்டும். புதிய தமிழகம் பொறுத்தவரையில் அந்த கொள்கையை வைத்துதான் எங்களின் பயணம் தொடர்கிறது என்றார்.

சவுக்கு சங்கர் வீட்டில் மலம் கொட்டப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் கூறியவர்,  சவுக்கு சங்கரின் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக  கூறியவர்,  “ஆளுங்கட்சியை விமர்சித்துவிட்டார் என்பதற்காக, சவுக்கு சங்கரின் தாய் இருக்கும் வீட்டில் கழிவுகளை வீசி சென்றது எந்த விதத்தில் நியாயம்?

தமிழ்நாட்டில் என்ன சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்படுகிறது? சவுக்கு சங்கர் சொன்னதில் உண்மை என்னவென்றால்… சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மாநகராட்சிகளில் துப்புரவு பணியாளர்கள் பெயரில் ரூ.50 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் வழங்கக்கூடிய எந்தவித வாகனங்களும், துப்புரவு பணியாளர்களிடம் இல்லை. அவர்களுடைய பெயரில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பட்டியலின மக்களுக்கு எஸ்சி, எஸ்டி மக்களுக்கு வழங்கவேண்டிய நிதி, ஒரு குறிப்பிட்ட சாதியினரின் பெயரில் ஒருசில அரசியல் கட்சிகள் மட்டுமே அபகரித்து கொள்கின்றன. தாட்கோ மூலம் கிடைக்கக்கூடிய நிதியில் மூன்றரை ஆண்டுகளில் கோடிகணக்கில் முறைகேடு நடந்துள்ளது. இதையே சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.  இச்சம்பவம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என வலியுறுத்தினார்.