சென்னை: கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய காவிரி தண்ணீரை திறந்து விட மறுத்து வருவதால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
காவிரி நீரை நம்பியே தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் சாகுபடி நடைபெற்று வருகிறது. நடப்பாண்டும், கர்நாடக மாநில அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடும் எதிர்பார்த்து, சாகுபடிகள் தொடங்கிய நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் துணைமுதல்வர் காவிரியில் தண்ணீரை திறந்து விட மறுப்பதுடன், தமிழ்நாடு அரசு, விவசாயிகள் சாகுபடி செய்வதை தடுத்திருக்க வேண்டும் என்று குதர்க்கமாக பேசி வருகிறார்.
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக அங்கு சென்று பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் பேசி, தண்ணீரை திறந்துவிட வலியுறுத்துவிட்டு, உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இதற்கிடையில் தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. போதிய நீர் கடைமடை வரை சென்றடையாததால் குறுவை சாகுபடி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறியிருந்தனர். காவிரியில் போதிய தண்ணீர் வராததால் குறுவை சாகுபடி செய்த நெற் பயிர்கள் காய்ந்து வருகின்றன. இதை காணும் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். பலர் பம்புசெட்டுகளில் இருந்து குடத்தில் தண்ணீர் பிடித்து வந்து பயிர்களுக்கு தெளித்து வருகின்றன.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசு, பயிரிடப்பட்டள்ள குறுவை பயிர்களை காக்க மாற்று வழி உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி தண்ணீரின்றி பாதிக்கப்பட்டுள்ள குறுவை பயிர்களை ஆய்வு செய்த வேளாண்மை துறை ஆணையர் சுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள், மாற்று வழிகுறித்து ஆலோசித்தனர். அருகே உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து விவசாயிகள் உதவியுடன் நீர் வரவழைத்து பயிர்களை காக்க முடியுமா என்பது குறித்தும், காய்ந்துபோன பயிர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.