சென்னை
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்ற வழக்கு விவரங்களைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
எந்த ஒரு தேர்தலிலும் அனைத்து அரசியல் கட்சிகளிலும் குற்ற வழக்கு நிலுவையில் உள்ளோர் போட்டியிடுவது தற்போது சகஜமாகி உள்ளது. தேர்தல் ஆணையம் தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர்களின் நிலுவையில் உள்ள குற்ற வழக்கு விவரங்களைக் கேட்ட போதிலும் இதற்காக வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதில்லை என்பதே உண்மையாகும்.
இந்நிலையில் தமிழக தேர்தல் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் விக்டர் ராஜ், வேட்பாளர்கள் குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கை தேர்தலில் போட்டியிடும் 3,998 வேட்பாளர்களில் 3,559 வேட்பாளர்களின் விவரங்களை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளதாகத் தேர்தல் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் காணப்படுவதாவது :
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 3,559 வேட்பாளர்களில் 466 பேர், தங்கள் மீது குற்ற வழக்கு உள்ளதாக அறிவித்துள்ளனர். 207 வேட்பாளர்கள் தங்களுக்கு எதிராகக் கடுமையான குற்றப்பிரிவுகளில் வழக்குகள் உள்ளன என்று அறிவித்துள்ளனர்.
இதில் கட்சி வாரியாக குற்றவியல் வழக்குகள் உள்ள வேட்பாளர் விவரங்களில் திமுகவில் 178 பேரில் 136 பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. அதிமுகவில் 191 வேட்பாளர்களில் 46 பேர் மீதும், பாஜகவில் 20 வேட்பாளர்களில் 15 பேர் மீதும், காங்கிரஸ் கட்சியில் 21 வேட்பாளர்களில் 15 பேர் மீதும், தேமுதிகவில் 60 வேட்பாளர்களில் 18 பேர் மீதும், பாமகவில் 10 பேர் மீதும் குற்றவியல் வழக்குகள் உள்ளன.
வேட்பாளர்களின் பொருளாதார பின்னணி குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் 3,559 வேட்பாளர்களில், 652 பேர் கோடீசுவரர்கள். அதில் அதிமுகவில் 164 வேட்பாளர்களும், திமுகவில் 155 வேட்பாளர்களும், காங்கிரஸில் 19 வேட்பாளர்களும், பாஜகவில் 15 வேட்பாளர்களும், தேமுதிகவில் 19 பேருக்கும், பாமகவில் 14 பேருக்கும் ஒரு கோடிக்கு மேல் சொத்து உள்ளது.