கொல்கத்தா: தேர்தல் தொடர்பான புகார்களின் மீது, 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும், குற்ற பின்னணி உள்ள வேட்பாளர்கள், அதை 3 செய்திதாளில் விளம்பரம் செய்ய வேண்டும் என்று த லைமை தேர்தல் ஆணையர் ராஜீவகுமார் உறுதி கூறினார்.
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல், மே மாதத்தற்குள் நடைபெறும் எதிர்பார்க்கப்படும் சூழலில், தேர்தல் அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை செய்து வரும் இந்திய தேர்தல் ஆணையர் மற்றும் அதிகாரிகள், மாநிலங்கள் தோறும் சுற்றுப்பயணம் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டு, ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது, மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மேற்கு வங்கத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் ஆலோசனை நடத்தினார். பின்னர் கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்தபோது,, “தேர்தல் ஆணையம் ‘சி-விஜில்: குடிமக்களே விழிப்புடன் இருங்கள்’ என்ற செயலியை செயல்படுத்தவுள்ளது. தேர்தல் தொடர்பான அசம்பாவிதங்களோ அல்லது வன்முறை சம்பவங்கள் ஏதேனும் அரங்கேற்றிட திட்டம் தீட்டினாலோ அல்லது அதற்கான முயற்சியில் இறங்கினாலோ, இந்த செயலி மூலம் பயனாளர்கள் புகார் அளிக்க முடியும். இந்த புகார்களின் மீது, புகாரளிக்கப்பட்ட 100 நிமிடங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி கூறினார்.
மேலும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யார் மீதாவது குற்றப் பின்னணி இருப்பது கண்டறியப்பட்டால், இந்த செயலி மூலம் அத்தகைய வேட்பாளர்களை எளிதாக கண்டறியலாம். மேலும், அவர்களின் குற்றப் பின்னணி குறித்தும் இந்த செயலி மூலம் கண்டறிய முடியும். இதனையடுத்து, அந்த வேட்பாளர்கள் 3 பத்திரிக்கை விளம்பரங்களை வெளியிட்டு, அவற்றில் தங்கள் மீதுள்ள குற்றப் பின்னணி குறித்து தெரிவிக்க வேண்டும். அதே போல, அரசியல் கட்சிகள் தங்கள் இணைய வலைதளப் பக்கத்திலும், பத்திரிக்கை விளம்பரங்களிலும் மேற்கண்ட விவரங்களை வெளியிட வேண்டும்” என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.