சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் ஒரே வாரத்தில் 27 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும்,  கடந்த 11 மாதத்தில் 615 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டம் மற்றம் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்  சென்னை பெருநகர காவல்துறை  தெரிவித்து உள்ளது.

இதை ஏதோ  சாதனையாக காவல்துறை தெரிவித்து உள்ளது. ஆனால், இது பெருமைப்படும் விஷயம் அல்ல; வருத்தப்பட வேண்டிய விஷயம். இதைச் சொல்வதற்கு காவல்துறை வெட்கப்பட வேண்டும். இது காவல்துறையின் கையாலாகாதனத் தையே காட்டுகிறது. குற்றச்செயல்கள் நடைபெறாதவாறு, முறையான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தால்,  இந்த நடவடிக்கையே ஏற்பட்டிருக்காதே.  ஆனால், காவல்துறையினரின் அறிக்கையை பார்க்கும்போது தமிழ்நாட்டில் குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதே ஊர்ஜிதம் செய்யப்பட்டு உள்ளது. இதை  கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை, முறையான நடவடிக்கை எடுக்காததே இவ்வளவு குற்றச்செயல்கள் அதிகரிப்பு காரணம் என்ற  விமர்சனம் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த பல மாதங்களாக வன்முறை, கொலை, சாதிய வன்முறை போன்றவை அதிகரித்து வருகின்றன. அதுபோல போதைப்பொருட்கள் நடமாட்டம் பட்டி தொட்டி எங்கும் கொடிகட்டு பறக்கிறது. இதை தடுக்க வேண்டிய காவல்துறை தடுக்காமல், போதை பொருட் கும்பலுக்கு துணையாக செயல்பட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. இந்த குற்றச்சாட்டின் பேரில் சென்னை மற்றும் தாம்பரம், ஆவடி போலீஸ் சரகத்தில் பல போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்ளதாக காவல் ஆணையர்கள் தெரிவித்து உள்ளனர்.

அதுபோல தமிழ்நாட்டில் கைது நடவடிகைகளும் அதிகரித்து வருகின்றன. ஆட்சியாளர்களையும், ஆட்சியையும் விமர்சனம் செய்தாலே, அவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில்,  சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 1 பெண் உள்பட 27 நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இது பெருமைப்படும் விஷயம் அல்ல; வருத்தப்பட வேண்டிய விஷயம்.

சென்னையில் அதிகரித்து வரும  குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி,   குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, முறையாக விசாரணை செய்யாமல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவ்வாறு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் நடவடிக்கைகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரிக்கும்போது, குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதுடன், காவல்துறையின் நடவடிகைகளையும் நீதிமன்றம் விமர்சிக்கும் நிலை உள்ளது.

ஜனவரி 1 முதல் நவம்பர் 22 வரை 615 பேர் குண்டர் சட்டத்தில் கைது

இந்த நிலையில்,  சென்னை காவல்துறை தெரிவித்துள்ள தகவலில்,  கடந்த ஜனவரி 1 முதல் நவம்பர் 22 வரை சென்னையில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 421 பேர், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 93 பேர், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்ததில் 77 பேர், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 4 பேர், பாலியல் தொழில் நடத்தியதாக 13 பேர், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக 4 பேர், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 2 பேர் மற்றும் உணவு பொருள் கடத்தல் பிரிவில் ஒருவர் என மொத்தம் 615 பேர் சென்னை காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டம் மற்றம் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு வாரத்தில் 27 பேர் குண்டர் சட்டத்தில் கைது

 நவம்பர் 16 முதல் 22 வரையிலான ஒரு வாரத்தில் 27 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதை இல்லா தமிழகம் என்ற இலக்கை அடைய தமிழ்நாடு காவல்துறை, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் மாநிலம் முழுவதும் போதைப்பொருளை ஒழிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல்: அதன்படி, கடந்த நவம்பர் 2 முதல் 20 வரையிலான 15 நாட்களில், போதைப்பொருள் மற்றும் மன மயக்கப்பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட மொத்தம் 248 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து மொத்தம் 783 கிலோ கஞ்சா, 10 கிராம் கோக்கைன், MDMA எக்ஸ்டஸி, 85 டேபெண்டடோல் ஹைட்ரோகுளோரைடு மாத்திரைகள் என 😯 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, கடந்த நவம்பர் 8 அன்று கீழையூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் நாகப்பட்டினம் மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ கஞ்சா மற்றும் 2 கார்கள், 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், மத்திய உளவுப் பிரிவு சென்னை (CIU) அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட சுமார் 100 கிலோ கஞ்சாவினை, லாரியுடன் வேலூர் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவினர் கைப்பற்றி, இரண்டு பேரை கைது செய்தனர். மேலும், மதுரையைச் சேர்ந்த 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு சிஐடி போலீசார், பெங்களூருவில் இருந்து போதைப்பொருளை கடத்தி வந்த நைஜீரியாவைச் சேர்ந்த மார்செல் குயோ (31) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 10 கிராம் கோகைன் மற்றும் MDMA, எக்ஸ்டசி போதை மத்திரைகளை பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களின் 7 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.