லக்னோ
நாளுக்கு நாள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகப் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறி உள்ளார்.
சமீபத்தில் டில்லியில் இருந்து ஒரிசா மாநிலத்துக்கு ஒரு ரயிலில் கிறித்துவ கன்னியாஸ்திரீகள் வந்து கொண்டிருந்தனர். அந்த ரயில் உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியை அடைந்தது. அப்போது இந்து அமைப்பான பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் திடீரென ரயிலைச் சூழ்ந்து கொண்டனர். அந்த கன்னியாஸ்திரீகள் மதமாற்றம் செய்பவர்கள் எனக் கூறி அவர்களைத் தாக்க முயன்றனர்.
இந்த சம்பவம் நாடெங்கும் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்கள் எனவும் பாராமல் அவர்களைத் தாக்க முயன்ற பஜ்ரங் தள அமைப்பினருக்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் மீது சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பல தலைவர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதினர்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இந்த சம்பவம் குறித்து, “பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை நிலவி வருகிறது. இவற்றை உடனடியாக களைய உத்தரப்பிரதேச அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.