சென்னை: தேனியில் அனுமதியின்றி கிராவல் அள்ளிய புகாரில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் உதவியாளர் உள்பட 11 அரசு அலுவலர்கள் மீது வழக்குப் பதியப்பட்டு உள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை (Directorate of Vigilance and Anti-Corruption) உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததை அது தொடர்பான வழக்கை முடித்து வைத்துள்ளது.
முன்னதாக தேனி மாவட்டம் உப்பார்பட்டியைச் சேர்ந்த ஞானராஜன் என்பவர் தேனி மாவட்டம் “வட வீரநாயக்கன்பட்டி கிராமத்தில், அரசு நிலங்களிலிருந்து, அனுமதி யின்றி, 500 கோடி ரூபாய் மதிப்பிலான கிராவல் மணலை உதவியாளர்கள் மூலமாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் எடுத்து விற்பனை செய்துள்ளதாக வும், இந்த முறைகேட்டில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அவரது உதவியாளர் அன்னபிரகாசம், அவரது உறவினர்கள் ஈடுபட்டுள்ளார்.
அரசு நிலங்களிலிருந்து மணல் எடுத்த பிறகு, அந்த நிலங்கள் தனியார் சொத்துகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடக்கோரி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியிருந்தார்.
இந்த மனுமீது விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவும், புகாரில் உண்மை இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடரவும் உயர்நீதிமன்றம் உத்தர விட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதி ஜி. சந்திரசேகரன் முன்பு இன்று (பிப்ரவரி 18) விசாரணைக்கு வந்தபோது லஞ்ச ஒழிப்புத் துறைத் தரப்பில், “ஓ. பன்னீர்செல்வத்தின் உதவியாளர் அன்னபிரகாசம், வருவாய்த் துறை, கனிமவளத் துறை அலுவலர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து அறிக்கைத் தாக்கல்செய்யப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது.இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, புகாரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுவிட்டதால், ஞானராஜன் தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கை இனிமேல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர். காவல்துறையினர் தாக்கல் செய்த அறிக்கையில், ஓபிஎஸ் உதவியாளர் அன்னபிரகாசம், கனிம வளத் துறையின் 5 அதிகாரிகள், வருவாய்த் துறையின் 6 அதிகாரிகள் என 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.