சென்னை:
மிழகத்தில் கொரோனா பாதிப்பு  3 நாட்களில் பூஜ்ஜியமாகும் என்ற முதல்வர் இப்போது என்ன சொல்லப் போகிறார்?” என்று கம்யூனிஸ்டு தலைவல்ர முத்தரசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“கடந்த 16.04.2020 ஆம் தேதி கோவிட் 19 நோய் தொற்று பரவல் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொளிக்காட்சி வழியாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விபரங்களை விளக்கிக் கூறினார்.

அதில் “தமிழகத்தில் இன்னும் மூன்று நாள்களில் கரோனா தொற்று பூஜ்ஜிய நிலைக்கு வந்து விடும்’ என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

கோவிட் 19 வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையில் 24.04.2020 ஆம் தேதி முதல் 14.04.2020 ஆம் தேதி வரை நாடு முழுவதும் முடக்கம் செய்யப்பட்டு, அது மேலும் மே 3 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (20.04.2020 ) முதல் ஊரடங்கு கட்டுப்பாட்டில் சில தளர்வுகள் செய்ய அனுமதித்துள்ளது.

ஆனால் தமிழ்நாடு அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மறு உத்தரவு வரும் வரை நீடிக்கும் என அறிவித்துள்ளது. இத்துடன் கடந்த 4 நாட்களாகவே கோவிட் 19 வைரஸ் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 105 பேருக்கு நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை மருத்துவர்கள் பேரும், செய்தியாளர்கள் 2 பேரும், காவல்துறை அலுவலர் ஒருவரும் நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனர். “மூன்று நாள்களில் கொரோனா பூஜ்ஜிய நிலைக்கு போகும்” என முதலமைச்சர் எந்த ஆதாரத்தில் அப்படி ஒரு தகவலை வெளியிட்டார்? இப்போது நோய்த் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறார்?

கொரானா வைரஸ் நோய் தொற்று குறித்த பரிசோதனை மையங்களையும், தினசரி பரிசோதனை செய்யப்படும் ‘மாதிரி’ எண்ணிக்கையையும் அதிகரிக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வரும் எதிர்க்கட்சிகள் மீது எரிந்து விழுந்து சீறுவதில் காட்டும் வேகத்தை கோவிட் 19 வைரஸ் தொற்று குறித்து பரிசோதனை செய்வதில் காட்ட வேண்டும்.

விரைவுப் பரிசோதனை கருவிகள் ஒரு லட்சம் வரும் என்றார்கள். இப்போது 25 ஆயிரம் வந்திருப்பதாகக் கூறுகின்றனர். முதல்வர் ஏகக் குழப்பத்தில் இருக்கிறாரா? அல்லது குழப்பத்தில் முதலமைச்சர் வைக்கப்பட்டுள்ளாரா? தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் இலவச மருத்துவ பரிசோதனை செய்யும் பணியில் அரசு அக்கறை காட்டி செயல்பட வேண்டும்.

மக்களுக்கு தேவையான காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்கள் விலைகள் உயர்ந்து வருவதை உணராத முதலமைச்சர், பொருள் போக்குவரத்து மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் சுங்கக் கட்டணங்கள் 12 சதவீதம் வரை மத்திய நெடுஞ்சாலை துறை ஆணையம் உயர்த்தி இருப்பது குறித்து முதலமைச்சர் வாய் திறக்கவில்லை. வரும் மூன்று மாதங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என மத்திய நெடுஞ்சாலை துறை உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

நாடும், மக்களும் கடுமையான கால கட்டத்தில் இருக்கும் போது முதலமைச்சர் செய்திகளை வெளியிடும் போது ‘உண்மைத் தன்மையை’ ஆதாரப்படுத்தி வெளியிட வேண்டும்”.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.