மதுரை, 

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள  மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தனது வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்து உள்ளது. அதன்படி, மதுரையில் பிரபல எழுத்தாளர் சு.வெங்கடேசன் களமிறக்கப்பட்டு உள்ளார்.

போராட்ட குணம் கொண்ட சு.வெங்கடேசன் மக்களுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்களில் களமிறங்கி, மதுரை மக்களிடையே பெரும் நன்மதிப்பை பெற்றவர்.

திருப்பரங்குன்றத்தைச் சார்ந்தவரான சு.வெங்கடேசனின் மனைவி பெயர் பி.ஆர். கமலா. இந்த தம்பதிகளுக்கு  யாழினி, தமிழினி என இரண்டு மகள்கள் உள்ளனர்.

எழுத்தாளர் சு.வெங்கடேசன் ஏராளமான கதை கட்டுரைகள் எழுதி உள்ளார். தமிழ்நாடுமுற்போக்கு  எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொது செயலாளராக உள்ளார். 2011 ஆம் ஆண்டு சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் நாவல் சாகித்திய விருது பெற்றார்.

2011ம் ஆண்டு எழுதிய முதல் நாவலான “காவல் கோட்டம்” நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. நான்கு கவிதை தொகுப்புகள், கலாச்சாரத்தின் அரசியல்,  ஆட்சி தமிழ்  ஒரு  வரலாற்றுப் பார்வை, வைகை நதி நாகரீகம், சமயம்கடந்த தமிழ், கதைகளின் கதை, உட்பட 16 நூல்கள் எழுதியுள்ளார்.

தமிழரின் தொல்நாகரீகத்தின் சான்றான கீழடி அகழாய்வு பிரச்சனையை உலகறியச் செய்வதில் முதன்மை பங்குவகித்தவர். தமிழ் செம்மொழி அந்தஸ்து பெற பல்வேறு போராட்டங்களை நடத்திய வர். ஜல்லிக்கட்டு  உள்ளிட்ட தமிழர் பண்பாட்டு பாதுகாப்பு  இயக்கங்களில் முக்கிய  பங்களிப்பை  செய்தவர்.

சமீபத்தில் ஆனந்த விகடன் வார இதழில் 119 வாரம் வெளியான  “வீரயுக நாயகன் வேள்பாரி”  என்ற நாவலின் ஆசிரியரும் ஆவார். தமிழ்மொழி தொடர்பான தேசிய ,சர்வதேசிய கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார்.

தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும், சாகித்ய  அகாதெமி விருது பெற்றவரும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினருமான தோழர்  சு. வெங்கடேசன் , சி.பி.எம் கட்சியில் 25 ஆண்டுகள் முழு நேரப் பணியாற்றி வருகிறார் அதன் காரணமாகவே அவருக்கு மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

சரியாக கூற வேண்டுமானால்  29 ஆண்டுகளாக கட்சி உறுப்பினராகவும், 28 ஆண்டுகளாக  கட்சியின் முழு நேர  ஊழியராகவும் பணியாற்றி வருகிறார். கட்சி நடத்திய பல்வேறு மக்கள் போராட்டங்களிலும், இயக்கங்களிலும் முக்கிய பங்கு வகித்துக் கொண்டிருப்பவர்.

ஏற்கனவே திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில், தற்போது பாராளுமன்ற தேர்தலில் களமிறங்குகிறார்.

ராஜ்குமார், மதுரை