சென்னை: தமிழ்நாட்டில் அறிவிக்கபடாத எமஜென்சி என விமர்சித்த சிபிஐ எம் நிர்வாகி பாலகிருஷ்ணனுக்கு ஏதாவது நெருடல் ஏற்பட்டிருக்கும், அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.
விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 24-வது மாநில மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தமிழ்நாடு மாநில நிர்வாகி, கே. பாலகிருஷ்ணன் பேசும்போது, மத்திய அரசு தனது தவறான கொள்கைகளை முன்னெடுக்கும் போது, திமுக அதை மக்களுக்கு எடுத்துக் காட்டும் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது. அதே நேரத்தில் தமிழகத்தில் சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் தொடங்குவதற்காக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் அடிப்படை உரிமைக்காக போராடினார்கள். இது இந்தியத் தொழிற்சங்கப் போராட்டத்தில் முத்திரைப் பதித்த போராட்டமாக இருந்தது. தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்ய திமுக அரசு மறுத்து வருவது வேதனையாக உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை நிகழ்வை அரசியல் செய்ய பாஜக நினைக்கிறது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக மட்டுமல்ல, நாட்டின் எந்த பகுதியிலும்பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழும் போது அதற்கு எதிராகப் போராடும் இயக்கமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருந்து வருகிறது.
பாஜக- ஆர்எஸ்எஸுக்கு எதிராக, பாசிச ஆட்சிக்கு எதிராக திமுகவுடன் இணைந்து நாங்கள் போராடி வருகிறோம். இந்தியா கூட்டணியில் இணைந்து பயணிக்கிறோம். அதே நேரத்தில் தமிழகத்தில் பட்டா கேட்டு போராடினால், தொழிலாளர்கள் உரிமைக்காக போராடினால் உடனடியாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்கின்றனர். தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு பேரணிக்கு அனுமதி மறுத்து, கடைசி நேரத்தில் அனுமதி தந்தீர்கள். பின்னர் கட்சியின் நிர்வாகிகளை அழைத்து பேரணிக்கு அனுமதியில்லை எனக் கூறுவது ஏன்?.
எதிர்க்கட்சியாக இருந்தாலும் எல்லா கட்சிகளும் நடத்துகிற போராட்டங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும். ஏன் அஞ்சுகிறீர்கள்? இந்த நிலை மாற வேண்டும். தமிழகத்தில் பல்வேறு மாடல்கள் இருந்தாலும் இடதுசாரிகள் மாடல்தான் சிறந்தது.”
தமிழ்நாட்டில், ஒரு ஆர்ப்பாட்டம், ஊர்வலம், போராட்டம் என்று சொன்னால் காவல்துறை வழக்கு போடுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் கேட்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டீர்களா நீங்கள்? எப்படி காவல்துறை இப்படி கட்டுப்பாடில்லாமல் செயல்படுகிறது. போராட்டத்தை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியம் என்ன? ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தால் அதற்கு அனுமதியை ரத்து செய்து, கைது செய்துவிட்டால் முடக்கிவிட முடியுமா? சீப்பை ஒளித்துவிடுவதனால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா? எனவே, இப்படிப்பட்ட போக்கை காவல்துறை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.
பாலகிருஷ்ணனின் பேச்சு, திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தி.மு.க. அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார். அப்போது, கடந்த ஆட்சியை ஒப்பிடும் போது ஆயிரக்கணக்கான போராட்டங்களுக்கு திமுக ஆட்சியில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி என்பது கடந்த ஆட்சி காலத்தில் தான் நடந்தது என்று கூறியவர், மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் தேவை என்ன என்பதை அறிந்து அது நிவர்த்தி செய்யப்படும் என்றார்.
மேலும், நேற்றுவரை ஆட்சியை பாராட்டியவர் பாலகிருஷ்ணன். அவருக்கு என்ன நெருடல் என புரியவில்லை. அவர் எந்த கண்ணோட்டத்தில் பேசுகிறார் என்பதும் தெரிய வில்லை. குற்றம்சாட்ட வேண்டுமென்ற நோக்கில் குறைசொன்னால் அதற்கெல்லாம் பதில் தர முடியாது.
பாலகிருஷ்ணனின் கோரிக்கைகள் என்னவென்று அறிந்து நிவர்த்தி செய்வோம். திமுக ஆட்சியில் எவ்வளவோ போராட்டங்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போராட்டங்களின்போது மக்கள் பாதிக்கக்கூடாது என்பதே அரசின் நோக்கம். அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடந்தது கடந்த ஆட்சிக்காலம். போராட்டம் நடத்துபவர்களை ரிமாண்ட் செய்யும் சூழ்நிலை கூட ஏற்படுவதில்லை என்றார்.
பின்னர் நேற்று மதுரையில் கைது செய்யப்பட்ட பாஜகவினரை, ஆட்டுமந்தைகள் அடைக்கப்பட்டுள்ள இடத்தில் அடைத்து வைத்ததாக குற்றம் சாட்டப்படுகிறதே என்ற கேள்விக்கு, அவ்வாறு பா.ஜ.கவினர் அடைக்கவில்லை என்று கூறினார்.
தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடணமா? திமுக கூட்டணி கட்சி கேள்வி