விருதுநகர்: தமிழ்நாட்டில் குடிநீரில் மலம் கலப்பது, குடிநீரில் சாணம் கலப்பது, பள்ளி மாணவர்களிடையே சாதி சண்டை போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில்,  விருதுநகர் அருகே பள்ளி குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கரைக்கப்பட்டது தொடர்பாக  விருதநகர் மாவட்ட எஸ்.பி. விளக்கம் அளித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள மேல்நிலைக் குடிநீர்த் தேக்கத் தொட்டியில், மலம் கலக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, வெள்ளனூர் போலீஸார் ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்தனர். ஆனால், குற்றவாளிகள் யாரும் கைதுசெய்யப்படவில்லை.

அதுபோல, சாதி பிரச்சினை காரணமாக கடையில் குழந்தைகளுக்கு பொருட்களை விற்க மறுத்து, அதை வீடியோவாக வலைதளத்தில் பரப்பிய கடைக்காரர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.’ நாங்குநேரியில் ஒரு தலித் மாணவன் தனக்கு சக மாணவர்களால் சாதி ரீதியாக இழைக்கப்பட்ட வன்கொடுமை குறித்து ஆசிரியர்களிடம் புகார் அளித்ததால், தலித் மாணவனையும் அவன் தங்கையையும் அந்த மாணவர்கள் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுபோல அமைச்சர் பொன்முடி,   அரசு விழா மேடையில் வைத்து நீங்கள் ‘எஸ். சி’ தானே என ஊராட்சி ஒன்றிய பெண் தலைவரை பார்த்து அமைச்சர் பொன்முடி கேட்டதும் விமர்சனத்திற்குள்ளானது.

இதுபோன்ற பல சம்பவங்களில் தமிழ்நாடு காவல்துறை முறையான நடவடிக்கை எடுக்காததால், சாதிய வன்முறைகள் தொடர்ந்துகொண்டே உள்ளது. இது தமிழ்நாட்டின் அவலமாக கருதப்படுகிறது.

இந்த நிலையில்தான்,  விருதுநகர் மாவட்டம் சின்னமூப்பன்பட்டி அரசுப்பள்ளி குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கரைக்கப்பட்டது தொடர்பாக எஸ்.பி. விளக்கம் அளித்துள்ளார்.

நடந்தது என்ன?

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு கட்டுப்பட்டது சின்னமூப்பன்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 222 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.   123 பேருக்கு முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் காலை உணவும், 150 பேருக்கு மதிய உணவும் வழங்கப்படு கிறது. இந்த பள்ளியில் 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.  இப்பள்ளியில் இவர்களில் செப்டம்பர் 6ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி என்பதால் பள்ளிக்கு விடுமுறை விடுபட்டிருந்தது.

இதையடுத்து  செப்டம்பர் 7  காலை சிற்றுண்டி செய்வதற்காக முன்னிரவே சமையல் செய்யும் பெண்கள் சமையல் முன்னேற்பாடுகளை செய்ய பள்ளிக்கு சென்றுள்ளனர். அச்சமயம் குடிநீர் குழாயில் துர்நாற்றம் வீசியுள்ளது.  இதனால் சந்தேகமடைந்த பெண்கள் குடிநீர் தொட்டியை திறந்து பார்க்கையில் குடிநீர் தொட்டிக்குள் மாட்டு சாணம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து தண்ணீர் தொட்டியைச் சுத்தம் செய்து மீண்டும் தண்ணீர் ஏற்றி பின்னர் பயன்படுத்தினர். இதே போன்று நேற்று காலையிலும் பள்ளி வளாகத்தில் உள்ள அதே குடிநீர் தொட்டியில் சாணம் கொட்டப்பட்டிருந்தது. தொடர் சம்பவத்தால் பள்ளிக்கு சமையல் வேலைக்கு வந்த ஊழியர்கள் அச்சமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சமையலுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்தது யார்? என விசாரணை நடைபெற்று வந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர், காவல்துறையினர் நிகழ்விடத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.

இச்சம்பம் குறித்து விசாரணை நடத்திய  ஊராட்சி நிர்வாகம்,  சாணம் கொட்டப்பட்ட குடிநீர் தொட்டி அவ்விடத்தில் இருந்து உடனடியாக அகற்றி நடவடிக்கை எடுத்தது.  அதோடு சமையல் கூடத்தின் உள் பகுதியில் புதிய தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டது. மேலும்,  தண்ணீர் தொட்டியைச் சுற்றி இரும்பால் ஆன `கிரில் கேட்’ அமைக்கப்பட உள்ளதாகவும் சாணத்தைக் கொட்டிய நபர்கள் யார் என்பதைக் கண்டறிய தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட  எஸ்.பி. ஸ்ரீனிவாச பெருமாள்  விளக்கம் அளித்துள்ளார். அப்போது,  2 சிறுவர்கள் குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணத்தை கரைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த சிறுவர்கள் கடந்த செப்.4ம் தேதி இரவு   விளையாட்டு தனமாக மாட்டுச்சாணத்தை கலந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. அசுத்தமடைந்த குடிநீர் தொட்டியை அகற்றி, புதிதாக பாதுகாப்பான இடத்தில் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என எஸ்.பி. தெரிவித்தார்.