டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்தி உள்ள மத்தியஅரசு இந்த (ஏப்ரல்) மாதத்தில், விடுமுறை தினங்கள் உள்பட அனைத்து நாட்களிலும் அரசு மற்றும் தனியார் மையங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 72ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியானது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள மத்தியஅரசு, கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் மட்டுமின்றி தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கி விட்டது.
நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல்ரகட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதனப்டி, முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. 2வது கட்டமாக கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை பாதிப்புகள் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 3வது கட்டமாக ஏப்ரல் 1ந்தேதி முதல், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியுள்ளது.
இந்தியாவில் தற்போது வரை 6 கோடியே 51 லட்சத்து 17 ஆயிரத்து 896 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது இந்திய மக்கள் தொகையை கணக்கில் கொண்டால் 100 பேரில் சுமார் 4 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், நாடு முழுவதும் அதிவேகத்தில் பரவி வரும் தொற்றைக் கட்டுப்படுத்த, நாள்தோறும் 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா அறிவுறுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து, , ஏப்ரல் மாதத்தில், விடுமுறை தினங்கள் உள்பட அனைத்து நாட்களிலும் அரசு மற்றும் தனியார் மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.