வாஷிங்டன்: ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும், முதல் 100 நாள்களுக்குள் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனவரியில் பதவி ஏற்க உள்ள அமெரிக்காவின் அடுத்த அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளாா்.
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோபைடன், ஜனவரியில் அதிபராக பதவி ஏற்க உள்ளார். ஏற்கனவே, பல முக்கிய பணிகளை தொடங்கியுள்ள ஜோ பைடன், கொரோனா தடுப்பு சிறப்பு மருத்துவக் குழு ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த குழுவில் இந்திய வம்சாவளி அமெரிக்க மருத்துவர் விவேக் மூர்த்தி, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செலின் கவுண்டர் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர். மருத்துவர் விவேக் மூர்த்தி, சர்ஜன் ஜெனரலாக பிடன் மருத்துவக் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியில் பிஃபைஸா், மாடா்னா நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. அந்த நிறுவனங்களுடன் தற்போதைய அதிபரான டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜோபைடன், அதிபர் டிரப்ம், கொரோனா தடுப்பூசி தொடர்பாக மேற்கொள்ள ஒப்பந்தங்களை உடனடியாக செயல்படுத்தி அதை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். அமெரிக்க மக்களுக்கும் உலகின் பிற நாட்டினருக்கும் அந்த தடுப்பூசி விரைவில் கிடைக்கச் செய்யும் வகையில் அதன் உற்பத்தியையும் உடனடியாக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த விவகாரத்தில் உள்ள சில பிரச்னைகளுக்குத் நான் நியமித்துள்ள மருத்துவக் குழுவினா் தீா்வைக் காண்பாா்கள் என்று கூறியவர், தான் பதவி ஏற்றதும், 100 நாள்களுக்குள் குறைந்தது 10 கோடி பேருக்காவது கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றவர், எனது அரசு அதற்கு முன்னுரிமை அளிக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், கொரோனா நெருக்கடி காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கும் முயற்சி எடுக்கும், அத்துடன் மாணவா்கள், ஆசிரியா்கள், பள்ளி ஊழியா்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பள்ளிகளில் அனைவருக்கும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும். அத்துடன், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும். கொ ரோனாவுக்கு எதிரான நமது போராட்டம் வெற்றியை நோக்கி வேகமாக நகரும்.
இவ்வாறு அவர் கூறினார்.