லண்டன்: இங்கிலாந்தில் டிசம்பர் 10ந்தேதி முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டவர்களில் சிலருக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கான தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. முதலாவதாக ரஷியா புட்னிக்5 தடுப்பூசியை தனது நாட்டு மக்களுக்கு போட்ட நிலையில், கடந்த 10ந்தேதி முதல், இங்கிலாந்தில்,  பிஃபைஸர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனாதடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

முதல்கட்டமாக முதியவர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும், சுகாதாரத்துறையினருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  அதன்படி, முதல் தடுப்பூசி  90வயதான மார்கரெட் கெனன் என்ற மூதாட்டிக்கு  தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து சுகாதாரப்பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முதற்கட்டமாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் சுகாதாரப் பணியாளர்கள் 2 பேருக்கு ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து,  ஒவ்வாமை அல்லது பக்கவிளைவுகள் ஏற்படும் நபர்கள் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், பிஃபைசர் நிறுவனம், தடுப்பூசி போடுவதால் சிலருக்கு இதுபோன்ற பக்க விளைவுகள் ஏற்படும் , அதனால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று விளக்கம் தெரிவித்து உள்ளது.