டெல்லி: கொரோனா 3வது அலை தவிர்க்க முடியாதது, அது  அக்டோபரில் தீவிரமாகும் என தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு எச்சரிக்கை  விடுத்துள்ளது. இது தொடர்பாக  மத்திய அரசுக்கு ஆய்வு அறிக்கை அளித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலக பொருளாதாரமே முடங்கிப்போனது. இந்தியாவிலும் கடந்த ஆண்டு (2020) மார்ச் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. தொடர்ந்து 2020  இறுதியில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்ததால், மக்கள் சற்றே உற்சாகமடைந்தனர். தங்களது பழைய நிலைக்கு திரும்பி வந்தனர். இந்த நிலையில், கொரோனா 2வது அலை பிப்ரவரியில் பரவத்தொடங்கி ஏப்ரல் இறுதி மற்றும் மே மாதத்தில் உச்சம் தொட்டது. இதனால் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது.  தொடர்ந்து, தொற்று பரவலை தடுக்க தடுப்பூசிகள் போடும் பணியும் தீவிரப்படுத்தப் பட்டது. இதன்காரணமாக தொற்று பரவல் குறையத் தொடங்கி, தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் மாநில அரசுகள் தளர்வுகள் அளித்து, மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டு வரத் தொடங்கியுள்ளது. இருந்தாலும் மக்கள் முககவசம் அணிய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதற்கிடையில் , கொரோனா மூன்றாவது அலை தொடர்பான எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஆகஸ்டு இறுதியில் 3வதுஅலை உச்சம்பெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றால், 3வது அலை தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். உலகின் பல நாடுகளில் மூன்றாவது அலை ஏற்கனவே எட்டி பார்த்து விட்ட நிலையில், இந்தியாவில் எந்த நேரமும் தாக்கக்கூடும் எனவும், அது 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை அதிக அளவில் தாக்கக் கூடும் எச்சரிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா 3ஆவது அலையின் ஆரம்பக் கட்டத்தில் நாம் இருப்பதாகவும், டெல்டா மாறுபாடு உலகளவில் ஆதிக்கம் செலுத்துகிறது உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதேநாம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்,  கொரோனா 3ஆவது அலை அக்டோபர் மாதத்தில் உச்சம் தொடும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் நிபுணர்கள் கொண்ட குழுவினர், கொரோனா தடுப்பு குறித்த முன்னெச்சரிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசுக்கு அளித்து வருகிறது. இக்குழுவினர் கொரோனா தொற்று குறித்த ஆய்வு அறிக்கையை மத்தியஅரசிடம் அளித்துள்ளனர். அதில்,  அனைத்து மாநிலங்களும் கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். 3ஆவது அக்டோபரில் உச்சநிலையை அடையும், இந்த அலைக்கு  குழந்தைகளை அதிகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

எனவே, நாடு முழுவதும குழந்தைகளுக்கான சிகிச்சைகளுக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்திட வேண்டும் ,  இணை நோய்கள் இருக்கும் குழந்தைகளுக்கும், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் சிறிது சிறிதாக அதிகமாகி வருவதாக சுட்டிக்காட்டியுள்ள தேசிய பேரிடர் ஆய்வறிக்கை, இரண்டாம் அலையில் பாதியளவு பாதிப்பு  3ஆவது அலையில் இருக்கக் கூடும் என்று கணித்துள்ளதுடன்  , மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள், வென்டிலேட்டர்கள், மருத்துவர்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஆக்சிஜனை இருப்பு வைக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டி உள்ளது.

கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் மாநிலஅரசுகள் தீவிரமாக பின்பற்றி, தொற்று பரவலில் இருந்து மக்களை பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றும் அக்குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர்.