மலிவான மற்றும் பரவலாக கிடைக்கக்கூடிய ஒரு மருந்து கொரோனா வைரஸால் தீவிரமாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அது டெக்ஸாமெதாசோன் (Dexamethasone).
“குறைந்த-டோஸ் ஸ்டீராய்டு சிகிச்சை மருந்தான டெக்ஸாமெதாசோன் கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் நமக்கு கிடைத்திருக்கும் ஒரு பெரிய திருப்புமுனை,” என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். உலகின் மிகப்பெரிய ஆய்வாக செய்யப்பட்ட, ஏற்கனவே இருக்கும் சிகிச்சைகளில் கொரோனாவுக்கும் பயன்படுத்தக்கூடிய சிகிச்சைகளை கண்டறியும் ஆய்வின் ஒரு பகுதியாக டெக்ஸாமெதாசோன் மருந்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதன்படி, இது வென்டிலேட்டர்களில் சிகிச்சைபெறும் நிலையில் உள்ள நோயாளில் மூன்றில் ஒரு பங்கு நோயாளிகளின் இறப்பு அபாயத்தைக் குறைக்கிறது. சுவாசம் அளித்து சிகிச்சை பெரும் நோயாளிகளுக்கு ஐந்தில் ஒரு பங்கு இறப்பு அபாயத்தைக் குறைக்கிறது. இங்கிலாந்தில், கொரோனா தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து இந்த மருந்து பயன்படுத்தப்பட்டிருந்தால், 5,000 உயிர்கள் வரை காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதிக எண்ணிக்கையிலான கோவிட் -19 நோயாளிகளைக் கொண்ட ஏழை நாடுகளில் இது பெரும் நன்மை பயக்கும்.
இங்கிலாந்து அரசு 200,000 கோர்ஸ்கள் டெக்ஸாமெதாசோனை அதன் கையிருப்பில் வைத்து, NHS மூலம் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்யவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோயாளிகளில் 20 பேரில் 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமலேயே குணமடைகிறார்கள். அனுமதிக்கப்பட்டவர்களில், பெரும்பாலானவர்கள் மீண்டு வருகிறார்கள். ஆனால், சிலருக்கு ஆக்ஸிஜன் சுவாசம் அல்லது வென்டிலேட்டர் உதவி தேவைப்படும் நிலை உள்ளது. இவர்களுக்கே டெக்ஸாமெதாசோன் சிகிச்சை தேவைப்படும். பல்வேறு நோய் நிலைகளில், நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகளை சீரமைக்க இந்த மருந்து ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸை எதிர்த்துப் செயல்படும்போது, நமது நோயெதிர்ப்பு மண்டலம் அதிகப்படியாக செயல்வினைபுரியும். இந்த நிலைமையில் அதிகப்படியான முதன்மை வைரஸ் எதிர்ப்பு புரதங்கள் (Cytokines) உற்பத்தி செய்யப்படும். இவ்வாறு செய்யப்படும் அதிகப்படியான உற்பத்தி நோயெதிர்ப்பு மண்டலத்தை ஸ்தம்பிக்கச் செய்து நமக்கே ஆபத்தாக முடியும் நிலை ஏற்படலாம். இந்த நிலை Cytokine Strom எனப்படும். இதனைத் தடுக்க டெக்ஸாமெதாசோன் உதவுகிறது.
ஆய்வுகளின்போது, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் குழு முன்னிலையில், சுமார் 2,000 மருத்துவமனை நோயாளிகளுக்கு டெக்ஸாமெதாசோன் வழங்கப்பட்டது. இவர்களின் சோதனை முடிவுகள் சுமார் 4,000-க்கும் அதிகமான மருந்து அளிக்கப்படாதவர்களின் சோதனை முடிவுகளுடன் ஒப்பிட்டதில், வென்டிலேட்டர்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு, 40% முதல் 28% வரை மரண அபாயத்தை குறைக்கிறது. ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு வந்த நோயாளிகளில், 25% முதல் 20% வரை மரண அபாயத்தை குறைக்கிறது. தலைமை ஆய்வாளர் பேராசிரியர் பீட்டர் ஹார்பி இதைப்பற்றி கூறும்போது, “இறப்பு விகிதத்தைக் குறைப்பதாக சோதனை முடிவுகளில் கண்டறியப்பட்ட ஒரே மருந்து இதுதான். அதுவும் குறிப்பிடத்தக்க அளவிலான முன்னேற்றத்துடன். இது ஒரு பெரிய திருப்புமுனை.” என்றார்.
மற்றொரு முன்னணி ஆராய்ச்சியாளர் பேராசிரியர் மார்ட்டின் லாண்ட்ரே கூறுகையில், “வென்டிலேட்டரில் உள்ள ஒவ்வொரு எட்டு நோயாளிகளில் ஒருவரையும், ஆக்சிஜன் கொடுக்கப்படும் ஒவ்வொரு 20-25 நோயாளிகளில் ஒருவரும் இந்த மருந்தால் காக்கப்படலாம்” என்று தெரிவித்தார்.
மேலும், “இந்த மருந்தின் மூலம் ஒரு தெளிவான தீர்வு கிடைக்கிறது என்பது புலனாகிறது,” என்றார். “இந்த டெக்ஸாமெதாசோன் சிகிச்சையானது 10 நாட்கள் வரை ஆகும். இதற்கு ஒரு நோயாளிக்கு, ஒரு நாளைக்கு 5 டாலர் வரை செலவாகும். எனவே அடிப்படையில் ஒரு உயிரைக் காப்பாற்ற 35 டாலர் வரை செலவாகும்”, என்றும் கூறினார். “இது உலகளவில் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு மருந்து. தேவைப்படும்போது, இம்மருந்து பொருத்தமான நோயாளிகளுக்கு தாமதமின்றி வழங்கப்பட வேண்டும்,” என்றார். “ஆனால், அதற்காக அனைவரும் கடைக்கு சென்று இம்மருந்தை வாங்கி வீட்டிற்கு எடுத்துச் செல்லக் கூடாது,” என்று மார்ட்டின் லாண்ட்ரே கூறினார்.
மேலும் ஆய்வுகளின்படி, கொரோனா வைரஸின் லேசான அறிகுறிகளைக் கொண்டவர்களுக்கும் சுவாச உதவி தேவையில்லாதவர்களுக்கு டெக்ஸாமெதாசோன் பெரிய அளவில் உதவவில்லை. மார்ச் முதல் இந்த ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்த ஆய்வில் மலேரியா மருந்தான, ஹைட்ராக்ஸி குளோரோகுயினும் சோதிக்கப்பட்டது. ஆனால், அதிக இறப்பு மற்றும் அதிகப்படியான பக்க விளைவுகள் காரணமாக இந்த ஆய்வு கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
கோவிட் -19 பாதிப்பில் இருந்து இறப்பு விகிதத்தைக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்ட முதல் மருந்து அந்த ஒரு புதிய, விலையுயர்ந்த மருந்து அல்ல. அனைவரும் ஏற்கனவே அறிந்திருந்த, முற்றிலும் மலிவான ஸ்டீராய்டு ஆகும். இது அனைவராலும் கொண்டாட வேண்டிய செய்தியாகும். ஏனென்றால் உலகெங்கிலும் உள்ள நோயாளிகள் உடனடியாக பயனடைய முடியும். அதனால்தான் இந்த சோதனையின் முதன்மை முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஏனெனில், உலகம் முழுவதும் இது சார்ந்து, மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் ஏராளம் உள்ளன.
முடக்கு வாதம் மற்றும் ஆஸ்துமா போன்ற பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க டெக்ஸாமெதாசோன் 1960-களின் முற்பகுதியில் இருந்து உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள நிலையில், வென்டிலேட்டர் தேவைப்படும் நிலையில் உள்ள நோயாளிகளிலும் பாதி பேர் உயிர்வாழ முடியாது. எனவே, அந்த ஆபத்தை மூன்றில் ஒரு பங்காக குறைப்பது உலகம் முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தீவிர நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை மற்றும் மாத்திரை வடிவத்தில் மற்றும் இரத்தகுழாய் வழியாக நேரடி ஊசி மூலம் இந்த மருந்து வழங்கப்படுகிறது.
இவை அனைத்தையும் தவிர, கொரோனா வைரஸ் உள்ளவர்களுக்கு குணமடையும் நேரத்தைக் குறைப்பதாக கண்டறியப்பட்ட மற்றொரு மருந்து ரெமெடிசிவிர் ஆகும். இது எபோலா வைரஸ் தொற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது கொரோனா வைரஸ் அறிகுறிகள் நீடிக்கும் கால அளவை 15 நாட்களில் இருந்து 11 ஆகக் குறைப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் அது இறப்பைக் குறைத்ததா என்பதைக் காட்டும் அளவுக்கு சான்றுகள் வலுவாக இல்லை. ஆனால், டெக்ஸாமெதாசோனைப் போலன்றி, ரெம்டெசிவிர் என்பது கட்டுப்படுத்தப்பட்ட விநியோகம் கொண்ட ஒரு புதிய மருந்து மற்றும் அதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
OLD IS GOLD – எவ்வளவு சத்தியமான வாக்கு!!!
நன்றி: BBC News online
ஆங்கிலம்: Michelle Roberts, Health Editor
தமிழில்: லயா