டெல்லி: கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை செப்டம்பர் 30 ந்தேதி வரை நீட்டிப்பு செய்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக தடுக்கப்படாத நிலையில், கொரோனா 3வது அலையும் விரைவில் பரவ வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது சர்வதேச விமானப் போக்குவரத்தும் கட்டுப்படுத்தப்பட்டது. தொற்று பரவல் குறைந்து வந்தாலும் சர்வதேச விமான போக்குவரத்து இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.
இந்த நிலையில், சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை செப்டம்பர் 30 ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேசமயம் வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை நாடு கொண்டு வரவும், உள்நாட்டில் சிக்கிய வெளி நாட்டினரை சொந்த நாட்டுக்கு அனுப்பவும், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மே மாதத்திலிருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருtதாக தெரிவித்து உள்ளது.
அதேவேளையில், சரக்கு விமானப் போக்குவரத்துக்கு எந்தத் தடையுமில்லை எனத் தெரிவித்துள்ள இயக்குநரகம், ‘ஏா் பபுள்’ விதிகளின் அடிப்படையில் விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.