டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4300ஐ தாண்டி உள்ளது. இதுவரை 37 பேர் பலியாகி விட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 300 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா வீரியமில்லை என்றாலும், முக்கவசம் அணிவது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நேற்று (ஜுன் 3ந்தேதி) காலை நிலவரப்படி இதுவரை நாடு முழுவதும் 3,961 பேருக்கு தொற்று பாதித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று காலை 8:00 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் புதிதாக 203 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழ்நாடு மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் தலா ஒருவர் என நான்கு பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஜனவரி 1 முதல் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32-ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் இணை நோய் உள்ளவர்கள் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 300 புதிய வழக்குகள் பதிவாகி உள்ளதாக மத்திய அரசு இன்று (ஜுன் 4ந்தேதி) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது., மேலும் 2 இறப்புகள் நிகழ்ந்துள்ளதுடன், மொத்த செயலில் உள்ள வழக்குகள் 4300 ஐ கடந்துவிட்டன என குறிப்பிட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 300ஐத் தாண்டியுள்ளது. கேரளா மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. தற்போது, கேரளாவில் 1,446 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அடுத்ததாக மகாராஷ்டிராவில் 494, குஜராத்தில் 397, டெல்லியில் 393 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நிலவரப்படி இந்தியாவில் 4,026 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 37 பேர் பலியாகி உள்ளனர்.