சென்னை: சென்னையின் மக்கள் தொகையில் 25% பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2வதுஅலை பரவல் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தடுப்பூசி போடும் பணிகளையும் மாநில அரசு தீவிரப்படுத்தியது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 2,689 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 5,04,502 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சென்னையில் 91 பேர் உயிர் இழந்துள்ளார்.இதனால் மொத்த உயிரிழப்பு 7,091 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 3,990 டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், இதுவரை குணமடைந்தேர் எண்ணிக்கை 4,63,489 ஆக உயர்ந்துள்ளது. தற்போது சென்னையில் 33,922 பேர் சிகிச்சையில் உள்ளனர் என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
மேலும், நேற்று ஒரே நாளில் 10,325 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகரத்தின் மக்கள் தொகை சுமார் 80 லட்சம் என தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், மே 31ந்தேதி வரை 20,23,055 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இது சென்னையின் மக்கள் தொகையில் 25% ஆகும்.
சென்னையில் தடுப்பூசி போடுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திய சென்னை மாநகராட்சி, தடுப்பூசி முகாம்களையும் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தியது. மேலும், நகரத்தில் பல்வேறு தடுப்பூசி முகாம்கள் பல்வேறு அமைப்புகளின் உதவியுடன் நடத்தப்படுகின்றன.
இதன் காரணமாக, கடந்த 7-10 நாட்களில் நகரத்தில் தடுப்பூசி பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.