6 மாதங்களுக்கு பிறகு குற்றாலம், ஒகேனக்கல் சுற்றுலாத்தலங்கள் இன்று முதல் திறப்பு….

Must read

நெல்லை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக சுமார் 6 மாதங்கள் மூடப்பட்டிருந்த, குற்றாலம், ஒகேனக்கல் போன்ற சுற்றுலாத்தலங்கள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது.

இரண்டாவது அலை கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனிடையே கொரோனா பரவல் குறையத் தொடங்கியதால் பல்வேறு தளர்வுகள் தமிழக அரசால் அளிக்கப்பட்டன, இந்த நிலையில் சினிமா திரையரங்குகள், மால்கள், பொழுது போக்கு இடங்கள், சுற்றுலா தலங்கள் போன்ற வற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், வழிபாட்டுத் தலங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் தடை நீடிக்கிறது.

இந்த நிலையில், குற்றாலம் மற்றும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிகளை பொதுமக்கள் குளிக்க திறக்கப்படுவது குறித்து வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறுகையில், வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில், மடம் சோதனைச்சாவடி, ஒகேனக்கல் பேருந்து நிலையம் மற்றும் ஆலம்பாடி சோதனைச்சாவடி ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா சோதனை செய்த பின்பே அனுமதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுலாப்பயணிகள் ஒகேனக்கல் அருவி மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும், பரிசல்களில் சென்று சுற்றிப் பார்க்க மட்டும் அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள்  கட்டாயம் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுபோல தென்காசி மாவட்டம் குற்றாலம் செல்லவும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. நீர்வீழ்ச்சிகளில் குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் உள்ளனர்.

More articles

Latest article