ஆசிரியர் போராட்டங்கள் குறித்து நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கும் விடுத்த உத்தரவுகளுக்கும் எதிராக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்பவர்கள் குறித்து ஆதாரத்துடன் ஆவணங்களாக தாக்கல் செய்யுங்கள்” என்று வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றத்தை, நீதிபதியின் கருத்துகளை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர்கள் என்.செந்தில்குமார், ஜி.சங்கரன், ஏ.பி.சூர்யபிரகாசம் ஆகியோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்தனர்.

அதில், “நீதிமன்ற உத்தரவுகளுக்கும், நீதிபதிகளுக்கும் எதிராக கருத்துகளை தெரிவிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட நபர் மீது குற்றம் சுமத்தினால் அவர் காவல் நிலையத்திலோ, மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திலோ புகார் அளிப்பார்கள்.

ஆனால் அந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி யாரிடமும் புகார் அளிப்பதில்லை. ஆகவே,  கட்டுப்பாடில்லாமல் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்கிறார்கள். . இதைத் தடுக்க வேண்டிய சென்னை காவல் ஆணையர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, அவரை நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தனர்.

கிருபாகரன்

இது குறித்து பதிலளித்த அரசு சிறப்பு வழக்கறிஞர் ராஜகோபாலன், முறையீடு செய்பவர்கள் ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுகின்றனர். உரிய ஆதாரங்களை தாக்கல் செய்தால் நடவடிக்கை எடுக்கிறோம் என்று தெரிவித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி கிருபாகரன், “எந்த உத்தரவு போட்டாலும் சிலர் விமர்சிக்கிறார்கள். குழு விவாதங்களில் பங்கேற்பவர்கள் கூட நீதிமன்ற உத்தரவு என்னவென்று புரிந்து கொள்ளாமல் பேசுகின்றனர். இதனால் சமூகத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரியாமல் பேசுகிறார்கள். ஒரு பெண் தொடர்ந்த வழக்கில் நீதிபதி ஒருவர் பிறப்பித்த உத்தரவை விமர்சிக்கும் ஒருவர், அந்தப் பெண்ணும் நீதிபதியும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர் என விமர்சிக்கிறார்.

ஹெல்மெட் கட்டாயம் என்று நான் உத்தரவு போட்ட போது, அதை விமர்சித்தும் கடிதங்கள் வந்தது. அவற்றில் 80% எதிர்மறை கருத்துக்கள்தான். சில கடிதங்களில், நான் இதுவரை தாய், தந்தை, ஆசிரியரிடம் திட்டு வாங்காத சொற்களில் வசை பாடியிருந்தனர்.

உனக்கு வண்டி ஓட்ட தெரியுமா, குண்டுங்குழியுமான சாலையில் மனைவியிடன் இரு சக்கர வாகனத்தில் சென்றிருக்கிறாயா என்றெல்லாம் எழுதியிருந்தனர்.

ஆகவே நீதிமன்ற உத்தரவுகளை சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சிப்பவர்கள் குறித்து ஆதாரத்துடன் தெரிவியுங்கள்” என்று உத்தரவிட்டார்.

பிறகு இவ்வழக்கை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.