2024 நாடாளுமன்ற தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரயிலில் இருந்து ரூ. 4 கோடி பணம் கைப்பற்றப்பட்டது.

இந்த விவகாரம் அப்போது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த பணம் பாஜக வேட்பாளருக்கு சொந்தமானது என்று கூறப்பட்டது.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இது தொடர்பாக பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்திடம் நீதிமன்ற அனுமதி பெற்ற பிறகே விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

கேசவ விநாயகத்தின் இந்த மனுவை ஏற்ற உயர்நீதிமன்றம் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் அவரிடம் விசாரணை நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், கேசவ விநாயகத்தை விசாரிக்க நீதிமன்ற அனுமதி தேவையில்லை என்று கூறி உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.