
புனே,
சாப்பிடும் உப்புமாவுக்கும் வெளிநாட்டு பணத்தை வைத்து கடத்த முயன்ற 2 பேர் புனே விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
1.29 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சியை உப்புமாவுக்குள் வைத்து துபாய்க்குக் கடத்த முயன்ற ஒரு பெண் உள்பட இருவர், புனே விமான நிலையத்தில் சோதனையின்போது பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
சம்பவத்தன்று, புனேவில் இருந்து விமானம் மூலம் துபாய் செல்ல இருவர் வந்தனர். அவர்களின் லக்கேஜ்களை சோதனை செய்த விமான நிலைய அதிகாரிகள், சந்தேகத்தின்போரில் சுங்கத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள், நிஷாந்த் என்ற அந்த பயணி லக்கேஜ்களை சோதனையிட்டனர். அப்போது, அவர் வைத்திருந்த ஹாட்பாக்ஸ் அதிக எடையுடன் இருந்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அதை திறந்த அதிகாரிகள், அதனுள் உப்புமா இருந்ததை கண்டனர். ஆனால், உப்புமா இவ்வளவு வெயிட் இருக்காதே என்று சந்தேகமடைந்த அவர்கள், உப்புமாவை வெளியே தட்டி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, உப்புமாவுக்குள் பாலீதீன் கவரில் சுற்றப்பட்ட 86,600 அமெரிக்க டாலர்கள் மற்றும் 15,000 யூரோக்கள் மதிப்பிலான கரன்சிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
அதேபோல், ரங்லானி என்பவரின் உடமைகளைச் சோதனையிட்ட மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் அவரும் உப்புமாவுக்குள் மறைத்து வெளிநாட்டு கரன்சிகளைக் கடத்த முயன்றதைக் கண்டுபிடித்தனர்.
அவரிடமிருந்து 86,200 அமெரிக்க டாலர்கள் மற்றும் 15,000 யூரோக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு கரன்சிகளின் மதிப்பு 1.29 கோடி ரூபாய் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உப்புமாவுக்குள் வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்ற புதுவித டெக்னிக் குறித்து வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
[youtube-feed feed=1]