சென்னை:
சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் குண்டு வீச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உயிரியல் மற்றும் பொருளாதாரம் படிக்கும் மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் குண்டு வீச்சு நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ளது குருநானக் கல்லூரி. மிகவும் பிரபலமான கல்லூரிகளில் ஒன்றான இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் சிலருக்குள், தங்களுக்குள் யார் பெரியவர் என்ற ரீதியில் மோதல் நீடித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி இரு தரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை மீண்டும் இருதரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு தரப்பு மாணவர்கள் நாட்டு வெடி குண்டுகளை வீசியதாக சொல்லப்படுகிறது.

இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் நான்கு மாணவர்களை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி வளாகத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.