சென்னை: 18வது மக்களவைக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், நாளை (ஜுன் 4ந்தேதி) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழ்நாட்டில் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை நோடல் அதிகாரிகளாக தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது.
பாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தொடர்ந்து, பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 4ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி 39 மையங்களில் உள்ள 43 கட்டிடங்களில் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில் சுமார் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் நாளை எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் பணியில் 10 ஆயிரம் பேரும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்து வைக்கும் பணியில் 24 ஆயிரம் பேரும், நுண் பார்வையாளர்களாக 4 ஆயிரத்து 500 பேரும் ஈடுபடுகிறார்கள். இ
39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி 39 மையங்களில் உள்ள 43 கட்டிடங்களில் நடைபெற உள்ளது. இந்த மையங்களில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு அறை வீதம் 234 அறைகளில் வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. ஒவ்வொரு அறையிலும் 14 மேஜைகள் வீதம் சுமார் 3 ஆயிரத்து 300 மேஜைகளில் இந்த வாக்கு எண்ணும் பணியானது நடைபெற உள்ளது. தேவையான இடங்களில் 14-க்கும் அதிகமான மேஜைகள் பயன்படுத்தப்படும்.
வாக்கு எண்ணிக்கையானது நாளை காலை 8 மணிக்கு அனைத்து மையங்களிலும் தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கப்படும்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஒவ்வொரு மேஜையிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, வாக்கு எண்ணும் பணி கண்காணிக்கப்படும்.
இந்நிலையில், தமிழகத்திற்கு நியமனம் செய்யப்பட்ட பார்வையாளர்கள் தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்க 2 நோடல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நோடல் அதிகாரிகளாக, கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் ஆனி ஜோசப், பொதுத்துறை செயலாளர் நந்தகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்படுள்ளனர். இவரும் பார்வையாளர்கள் தொடர்பான பணிகளை ஒருங்கிணைப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் அரசியல் கட்சி முகவர்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகார அட்டை வழங்கப்பட்ட பணியாளர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இவர்களை சீர் செய்வதற்காக சவுக்கு கம்புகளால் வரிசைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும், குடிநீர் வசதி மற்றும் நகரும் கழிப்பறை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அறைக்கான பாதுகாப்பு பணியில் மத்திய ஆயுதப்படை போலீசாருக்கு அடுத்தபடியாக 2-வது அடுக்காக மாநில ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
3-வது அடுக்காக உள்ளூர் போலீசார் வாக்கு எண்ணும் மையங்களின் நுழைவாயில்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையை பொறுத்தவரை 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் தலா ஆயிரம் போலீசார் வீதம் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்த வகையில், தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில் சுமார் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சுமார் 60 ஆயிரம் போலீசார் தமிழகம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
மொத்தத்தில் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 15 கம்பெனி துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.