சென்னை

மிழ்நாடு அரசுப் பள்ளிகளில் உள்ள 2348 காலியிடங்கள் நிரப்புதல் மற்றும் பணியிட மாறுதல்களுக்கான கலந்தாய்வுக்கு ஏற்[ஆடி நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பணியிட மாறுதல், பதவி உயர்வு மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. நடப்பாண்டிற்கான கலந்தாய்வு வரும் 8ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கலந்தாய்வில் பங்குபெறும் ஆசிரியர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப்பணியிடங்கள் மற்றும் உபரி பணியிடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு, நகராட்சி பள்ளிகளில் 2,348 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் தமிழ் பாடத்தில் 493 இடங்களும், ஆங்கிலத்தில் 254, கணிதத்தில் 485, அறிவியலில் 728 மற்றும் சமூக அறிவியலில் 388 பணியிடங்கள் உள்ளன.

இவற்றில் அதிகபட்சமாகத் திருவண்ணாமலை மாவட்டத்தில் 241 பணியிடங்கள் காலியாக உள்ளது. இங்கு பாட வாரியாக, தமிழ் 40, ஆங்கிலம் 44, கணிதம் 59, அறிவியல் 73 மற்றும் சமூக அறிவியல் 25 பணியிடங்களில் ஆசிரியர்கள் இல்லை.   மதுரையில் ஒரே ஒரு ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பணியிடம் மட்டும் காலியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் தமிழ் 12, ஆங்கிலம் 3, கணிதம் 13, அறிவியல் 17 மற்றும் சமூக அறிவியல் 4 பணியிடங்கள் என 49 பணியிடங்கள் காலியாக உள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் 5, தர்மபுரி மாவட்டத்தில் 45, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 179 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன.

இதையடுத்து உபரியாகக் கண்டறியப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு வரும் 17ம் தேதி நடக்கிறது. அன்று காலியாக உள்ள பணியிடங்களுக்கும், கூடுதல் தேவையுள்ள இடங்களுக்கும் சீனியாரிட்டி அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். அதைத் தொடர்ந்து உள்ள காலிப்பணியிடங்களுக்கு மாவட்டத்திற்குள் கலந்தாய்வு 19ம் தேதியும், மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கலந்தாய்வு 20ம் தேதியும் நடக்கிறது.