சென்னை:
சென்னையில், கொரோனா பாதித்து வீட்டு தனிமையில் உள்ள நபர்களுக்கு கடந்த 10 நாட்களில் 1,51,124 அழைப்புகள் மூலம் உடல்நிலை குறித்து மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று பாதித்த நபர்கள் முதற்கட்ட உடற்பரிசோதனை மையங்களுக்கு (Screening Centers) மாநகராட்சியின் கோவிட் சிறப்பு வாகனங்களின் மூலம் அழைத்து செல்லப்பட்டு, பரிசோதனைகளுக்கு பிறகு தொற்று பாதிப்பு குறைவாக உள்ள நபர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின்படி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களின் உடல்நிலை குறித்து நாள்தோறும் தொடர்ந்து கண்காணிக்கவும், தனிமையின் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்திற்கு ஆலோசனை வழங்கவும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ஒரு மண்டலத்திற்கு ஒன்று வீதம் 15 தொலைபேசி ஆலோசனை மையங்கள் (Tele-Counseling Centers) மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையிடமான ரிப்பன் கட்டிடத்தில் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் தொலைபேசி ஆலோசனை மையம் அமைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.